டெல்லியில் மலருமா தாமரை....ரெய்டு அரசியலை கையிலெடுத்த பாஜக.....பின்வாங்குமா ஆம் ஆத்மி....

டெல்லியில் மலருமா தாமரை....ரெய்டு அரசியலை கையிலெடுத்த பாஜக.....பின்வாங்குமா ஆம் ஆத்மி....
Published on
Updated on
2 min read

சிறந்த கல்வி அமைச்சர் என உலக அளவில் பாராட்டப்பட்ட நாளில் ரெய்டு வட்டத்திற்குள் கொண்டு வரப்பட்ட மணீஷ் சிசோடியா.

வரி மீறல் குற்றசாட்டு:

டெல்லியில் தொழில் பரிவர்த்தனை விதி முற்றிலுமாக மீறப்பட்டுள்ளதாக, அண்மையில் டெல்லி தலைமைச் செயலர் புகார் அளித்திருந்தார். குறிப்பாக உற்பத்தி வரித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, மதுபான லைசென்ஸ் வழங்குவதில் முறையற்ற வகையில் சலுகைகள் காட்டியதாகவும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எதிர்ப்புக்கள்:

சிசோடியாவின் புதிய விதி நடைமுறைக்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து துணைநிலை ஆளுநரிடம் புகார் அளித்திருந்தன.

அதனடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்த  துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். இதனால் அவரது வீட்டில் எந்நேரமும் சிபிஐ சோதனை நடத்த கூடும் என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

சிபிஐ சோதனை:

மணிஷ் சிசோடியா வீட்டில் இன்று காலை சிபிஐ சோதனையை தொடங்கியுள்ளது. இதுதவிர மேலும் 3 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்கள் உள்பட 21 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

கெஜ்ரிவால் விமர்சனம்:

சோதனை நடைபெற்று வருவதை விமர்சித்து முதலமைச்சர் கெஜ்ரிவால் ட்விட் செய்துள்ளார். டெல்லியின் உயர்தர கல்வி மாடலையும், அதனை நிகழ்த்தி காட்டிய மணீஷ் சிசோடியாவையும் பாராட்டி அமெரிக்க நாளிதழின் முகப்பு பக்கத்தில் இன்று கட்டுரை வெளியாகியுள்ளது. உலக அரங்கில் இந்தியாவை பெருமை அடைய செய்த சிசோடியாவின் வீட்டில்  சிபிஐ இந்த சோதனையை நடத்தி அவரை பெருமையடைய செய்துள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தடைகள் எங்களை நிறுத்த முடியாது:

சிசோடியா மீது இது முதல் ரெய்டு இல்லை எனவும் கடந்த 7 ஆண்டுகளில் சிசோடியா மீது பலமுறை ரெய்டுகள் நடத்தப்பட்டதாகவும் ஆனால் எதுவும் சிக்கவில்லை எனவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.  

தடைகள் பல வந்தாலும் எங்கள் பணி நிற்காது என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மிஸ்டு கால் பிரச்சாரம்:

இந்தியாவை நம்பர் 1 ஆக்குவதற்கான முயற்சியில் தேசிய பணியில் அவர்களுடன் கைகோர்க்க மக்களை வலியுறுத்தியுள்ளார் டெல்லி முதலமைச்சர்.  தயவுசெய்து 9510001000 என்ற எண்ணுக்கும் மிஸ்டு கால் கொடுங்கள், இந்தியாவை மேலே கொண்டு செல்வோம் என அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com