அகிம்சை நாயகன் சிலை மீது வன்முறை தாக்குதல்....ஏன் இந்த வெறுப்பு!!!!

அகிம்சை நாயகன் சிலை மீது வன்முறை தாக்குதல்....ஏன் இந்த வெறுப்பு!!!!
Published on
Updated on
1 min read

நியூயார்க் நகரில் வெறுப்பு தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதாக நியூயார்க் நகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.  மேலும் குறிப்பாக இத்தகைய வெறுப்பு தொடர்பான தாக்குதல்கள் இந்துக்கள் மீது மிக அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.  இது தொடர்பான குற்றங்களில் வெள்ளை மேலாதிக்க சிந்தனை கொண்டவர்கள் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.  ஒரு அறிக்கையின் படி, கடந்த ஆண்டை விட வெறுப்பு தொடர்பான குற்றங்கள் 15.7 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

 நியூயார்க்கில்:

நியூயார்க்கின் குயின்ஸ் நகரில் இருக்கும் கோயிலுக்கு வெளியே இருந்த மகாத்மா காந்தி சிலை மர்ம நபர்களால் அழிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நள்ளிரவு 1.30 மணியளவில் காந்தி சிலையை 6 பேர் உடைத்து அதில் ஆபாசமான முறையில் வண்ணம் தீட்டியதாக நியூயார்க் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இதற்கு முன்னர் ஆகஸ்டு மாதத்தின் தொடக்கத்தில் ஸ்ரீ துளசி மந்திருக்கு வெளியே இருந்த சிலையும் மர்ம நபர்களால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கண்டனங்கள்:

மகாத்மா காந்தி சிலை உடைப்புக்கு எதிராக தொடர்ச்சியாக கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

காந்தி அமைதியை பிரதிநித்துவப்படுத்துபவர் எனவும் மர்ம நபர்கள் அவருடைய சிலையை குறிவைத்து சேதப்படுத்துவது கவலையளிப்பதாகவும் ஸ்ரீ துளசி மந்திர் நிறுவனர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்துக்களுக்கு எதிரான வெறுப்பை எதிர்த்து போராட காந்தியை போன்று அமைதியான வழியை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் குற்றவாளிகள் விரைவாக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனவும்  நியூயார்க் நகரத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார் கூறியுள்ளார்.

இதற்கு முன்பும்:

கனடாவில் இந்த வருடம் ஜூலை மாதத்தில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது.  இதை எதிர்த்து பெரிய அளவில் கண்டனங்கள் எழுப்பப்பட்டது. 

மன்ஹாட்டனில் இந்த ஆண்டு பிப்ரவரியில் ஒரு பெரிய காந்தி சிலை உடைக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com