பீகார் முதலமைச்சராக 8வது முறையாக பொறுப்பேற்ற பின்பு ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவை முதன் முறையாக சந்தித்தார் நிதிஷ் குமார்.
2020 பீகார் தேர்தல்:
பீகாரில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. இதில் பாஜக 77 இடங்களிலும், ஜனதா தளம் 45 இடங்களிலும் வெற்றி பெற்றன. எனினும், தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தப்படி ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்றார்.
பாஜகவுடனான உறவு முறிவு:
கட்சியை பலவீனப்படுத்துவதற்கு பாஜக முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டி வந்த ஐக்கிய ஜனதா தளம், மத்திய அரசின் பல்வேறு கூட்டங்களை புறக்கணித்தது. அதேபோல் பிரதமர் மோடியுடனான சந்திப்பையும் கடந்த சில மாதங்களாக நிதிஷ் குமார் தவிர்த்து வந்தார். இதன்பின்னர் பாஜகவுடன் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடு நிலவி வந்த நிலையில், அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார் நிதிஷ்குமார்.
மகாகத்பந்தன் கூட்டணி:
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் மற்றும் சில உள்ளூர் கட்சிகளுடனான மகாகத்பந்தன் கூட்டணியில் மீண்டும் இணைந்து ஆட்சியை தக்க வைத்தார். அதன்பின் பீகார் மாநிலத்தில் 8-வது முறையாக முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
மேலும் படிக்க: வெற்றி பெறுமா மகாகத்பந்தன் 2.0?
நிதிஷ்-லாலு சந்திப்பு:
பாஜகவில் இருந்து பிரிந்து லாலு யாதவின் ஆர்.ஜே.டியுடன் இணைந்து ஆகஸ்டு 10ம் தேதி முதலமைச்சராக பதவியேற்ற பின்பு நேற்று இரவு லாலுவும் நிதிஷ் குமாரும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவும் அவரது தாயாரும் முன்னாள் பீகார் முதலமைச்சருமான ராப்ரி தேவி சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோரும் உடனிருந்தனர்.
ஒன்றாக இருக்கிறோம்:
சந்திப்பு முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ் குமார் ”நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். பல ஆண்டுகளாக ஒன்றாக இருக்கிறோம். எங்களுக்குள் பழைய உறவு உள்ளது. இது புதியது அல்ல” என லாலுவுடனான உறவு குறித்து பேசியுள்ளார்.
மேலும் பாஜக குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க விருப்பமில்லை என கூறிய நிதிஷ் “இப்போது அவர்கள் மனதில் தோன்றியதை பேசுவார்கள். அவர்கள் எதையும் சொல்லலாம். அதைக் குறித்து கவலையில்லை. இனி இந்த அரசாங்கத்தின் கீழ் இன்னும் அதிகமான பணிகள் சிறப்பாக நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.