வெற்றி பெறுமா மகாகத்பந்தன் 2.0?

வெற்றி பெறுமா மகாகத்பந்தன் 2.0?

தொடர்ந்து கூட்டணியை மாற்றி கொண்டே இருக்கும் நிதிஷ் குமாரின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்பியுள்ளனர்.

நிதிஷின் முதலமைச்சர் கனவு:

நிதிஷ் குமாரின் முதலமைச்சர் பயணம் பாஜக கூட்டணியுடன் தொடங்கியது.  நிதிஷின் முதலமைச்சர் கனவை நிறைவேற்றியது பாஜகவே.  ஆனால் தற்போது லல்லுவுடன் இணைந்து பாஜகவின் முதுகில் குத்தியுள்ளார் நிதிஷ் என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்துள்ளனர்.  

லல்லு பிரசாத் யாதவுடன் சகோதர உறவில் இருந்த நிதிஷ் முதலமைச்சர் ஆசையில் அவருடனான உறவை முறித்து 2000ல் பீகாரின் முதலமைச்சராக முதல் முறையாக பதவியேற்றார்.  பாஜக நிதிஷின் கூட்டணி 2013 வரை ஆரோக்கியமாகவே இருந்தது.  2013ல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீண்டும் சமாதானமாயினர் நிதிஷும் பாஜகவும்.  ஆனால் மறுபடியும் 2015ல் ஏற்பட்ட கருத்து முரண்பாடு ஏற்படவே கூட்டணியில் இருந்து வெளியேறினார் நிதிஷ்.

’மகாகத்பந்தன்’ கூட்டணி:

பாஜகவிலிருந்து வெளியேறிய தம்பி நிதிஷை மீண்டும் அன்பு கரம் கொண்டு அணைத்து கொண்டார் நிதிஷின் அண்ணனான லல்லு. 2015ல் காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம்-ஐக்கிய ஜனதா தளம் இணைந்து ’மகாகத்பந்தன்’ கூட்டணியை உருவாக்கின.  2015 தேர்தலில் மகாகத்பந்தன் கூட்டணி வெற்றி பெற்றது.  நிதிஷின் ஐக்கிய ஜனதா தளத்தை விட லல்லுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் அதிக தொகுதிகளை பெற்ற போதிலும் நிதிஷை முதலமைச்சராக்கினார் லல்லு பிரசாத் யாதவ்.

தர்மத்தின் கூட்டணி:

2017ல் துணை முதலமைச்சரும் லல்லு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் மீதான ஊழல் குற்றசாட்டிற்கு விளக்கம் அளிக்க மறுத்ததால் பதவி விலக கோரினார் நிதிஷ்.  அவர் பதவி விலகாததால் நிதிஷ் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராக 7வது முறையாக பொறுப்பேற்றார்.  அப்போது இந்த கூட்டணியை குறித்து அமித் ஷா ’தர்மத்தின் கூட்டணி’ எனக் கூறினார்.

தர்மத்தின் கூட்டணி முறிவு:

தற்போது தர்மத்தின் கூட்டணியை உடைத்து மீண்டும் மகாகத்பந்தன் கூட்டணியுடன் இணைந்துள்ளார் நிதிஷ்.  இந்த முறையும் எவ்வித மறுப்பும் இன்றி தம்பி நிதிஷை அரவணைத்துள்ளார் லல்லு.  மகாகத்பந்தன்
கூட்டணி ஆதரவுடன் 8வது முறையாக முதலமைச்சராகியுள்ளார் நிதிஷ்.  ஊழல் செய்தார் எனக் காரணம் காட்டிய தேஜஸ்வி யாதவை துணை முதலமைச்சராக்கியுள்ளார்.

மேலும் படிக்க: பிரிந்தது ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி

முறிவிற்கான காரணம்:

நிதிஷின் கட்சி தாவலுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் பாஜகவின் தனித்து ஆதிக்கம் செலுத்தும் செயல்பாடே முக்கிய காரணம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  பாஜக 2024 தேர்தலில் 243 இடங்களில் 43 இடங்களை மட்டுமே நிதிஷூக்கு ஒதுக்கப் போவதாக அறிவித்ததை தொடர்ந்தே இந்த பிரிவு ஏற்பட்டுள்ளது.  நிதிஷின் முதலமைச்சராகவே தொடர வேண்டும் என்ற ஆசையும் பாஜகவின் தனித்து இயங்க வேண்டும் என்ற சுயநலமுமே தர்மத்தின் கூட்டணியை உடைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க: நிதிஷின் அரசியல் எதிர்காலம்என்ன?

வெற்றிபெறுமா ’மகாகத்பந்தன் 2.0’ கூட்டணி:

8வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிதிஷ் சுயநலமாக செயல்படுகிறார் என்ற எண்ணம் பீகார் மக்களிடையே உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக நாடு முழுவது அதிக செல்வாக்கை பெற்றுள்ள நிலையில் இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சி பொறுப்பில் உள்ள காங்கிரஸ் ஊழல் குற்றசாட்டில் சிக்கியுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் சுயநலமாக செயல்படும் நிதிஷ் இவர்களின் கூட்டணி 2025 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு என்பது கேள்விக்குறியான ஒன்று.