கோவை உக்கடம் குண்டு வெடிப்பு வழக்கில், 6வது நபராக ஜமேஷா முபின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை உக்கடம் அருகே கடந்த 23-ம் தேதி காரில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் காரை ஓட்டி வந்த அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். மேலும் விபத்து நடந்த இடத்தில் இரும்பு ஆணிகள், வெடித்த குண்டுகளும் சிதறிக் கிடந்தன.
இதைத்தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், அவர்களின் இ-மெயில், வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைத்தளங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை அடுத்து, வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை டி.ஐ.ஜி. கே.பி.வந்தனா தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் 20-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்தநிலையில் 6வது நபராக முபினின் உறவினரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குண்டு தயாரிப்புக்காக முபின் பிளிப்கார்ட், அமேசான் போன்ற வணீக வலைதளங்களில் இருந்து 76 புள்ளி 5 கிலோ ரசாயனங்களை வாங்கியதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.