உலகக் கோப்பை கிரிக்கெட் - ஆஸ்திரேலியாவுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!

உலகக் கோப்பை கிரிக்கெட் - ஆஸ்திரேலியாவுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!

பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் மற்றும் அனைத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களையும் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமது முதற்கட்ட ஜப்பான் பயணத்தை முடித்த அவர், இரண்டாம் கட்ட பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். அவருக்கு பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அந்தவகையில், பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ் உற்சாக வரவேற்பளித்தார். மேலும், சிட்னியில் உள்ள அட்மிரால்டி இல்லத்தில் வைத்து மோடிக்கு சம்பிரதாய மரியாதை அளிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து அட்மிரால்டி மாளிகையில் வைத்து பார்வையாளர்கள் புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார். இதனையடுத்து இரு நாட்டு பிரதமர்களும் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின்னர், புரிந்துணர்வு ஒப்பந்தங்களை  இருவரும் பார்வையிட்டனர். இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிக்க : ”சொந்த பாதுகாப்புக்காக போராடும் நிலைக்கு நிர்பந்தம்” - கேள்வி எழுப்பும் கமல்ஹாசன்!

இதனையடுத்து பேசிய பிரதமர் மோடி கடந்த ஓராண்டில் இது 6ஆவது சந்திப்பு என்றும், இது விரிவான உறவுகளின் ஆழத்தையும் நமது உறவுகளின் முதிர்ச்சியையும் பிரதிபலிக்கிறது எனவும் கூறியுள்ளார். மேலும் கிரிக்கெட்டின் மொழியில், இரு நாட்டு உறவுகளும் டி20 முறையில் நுழைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கோயில்கள் மீதான தாக்குதல் மற்றும் பிரிவினைவாத சக்திகளின் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடன் விவாதித்ததாகவும், அதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்,. 

சுரங்கம் மற்றும் முக்கியமான கனிமங்கள் ஆகிய துறைகளில் மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தியதாகவும், பசுமை ஹைட்ரஜனில் பணிக்குழுவை அமைக்க முடிவு செய்திருப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.