பாரத் ஜோடா யாத்ரா:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் கடந்த 7-ம் தேதி காந்தி மண்டபம் முன்பு தொடங்கினார். அதில் தேசியக்கொடியை கையில் ஏந்தியவாறு சுமார் 700 மீட்டர் தூரம் நடந்து வந்த ராகுல்காந்தி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மலர் பாதை வரவேற்பு:
இதனையடுத்து, நேற்று 3-வது நாள் பாதயாத்திரையை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் தொடங்கி தக்கலை முளகுமூடு பகுதியை நோக்கி 18 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டார். அந்த பயணித்தின் போது வில்லுக்குறியில் மலர் பாதை அமைத்து ராகுலுக்கு வரவேற்பு அளிக்கபட்டது. அப்போது பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை சந்தித்து பேசினார் ராகுல் காந்தி.
சர்ச்சை கருத்துகளுக்கு பெயர்பெற்றவர்:
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இதற்கு முன்னரே பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, திமுக அமைச்சர் ஆகியோரைக் குறித்து சர்ச்சை கருத்துகள் கூறியதற்காக கைது செய்யப்பட்டவராவார்.
ராகுல்- பொன்னையா:
பொன்னையாவுடனான ராகுலின் சந்திப்பின் போது மதக் கருத்துகள் குறித்த உரையாடல் ஏற்பட்டது. அதில் ராகுல் காந்தி “ இயேசு கிறிஸ்து கடவுளின் வடிவமா? அது சரியா?” என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பாதிரியார் “ அவர்தான் உண்மையான கடவுள்” என்று பதிலளித்துள்ளார்.
மேலும் பொன்னையா “அவர் தன்னை ஒரு மனிதனாக வெளிப்படுத்தினார்...அதனால் நாம் அவரை ஒரு மனிதனைப் போல் பார்க்கிறோம்...அவர் சக்தியை போல் அல்ல....” என்றும் கூறியுள்ளார்.
பாஜக கண்டனம்:
பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷேஜாத் பூனாவல்லா “ஜார்ஜ் பொன்னையா சக்தி போல் அல்லாமல் இயேசு மட்டுமே உண்மையான கடவுள் எனக் கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.” என பதிவிட்டுள்ளார்.
மேலும் “ முன்னதாகவே பொன்னையா அவருடைய மதம் சார்ந்த சர்ச்சை கருத்துகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். பாரத மாதாவின் அசுத்தங்கள் என்னை மாசுப்படுத்தக்கூடாது என்பதற்காகவே காலணி அணிந்துள்ளேன்” என்று அவர் பேசியதை இங்கு நினைவுகூர்ந்தார் பூனாவல்லா.
பொன்னையாவின் இந்த கருத்து இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.