கருப்பை தொழிற்சாலை குறித்த விளக்க வீடியோ ஒன்று கடந்த வாரம் இணையத்தில் வெளியாகி மிகப் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து சில ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பயோபேக்:
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பயோபேக் என்ற செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் 8 ஆடுகளையும், 2012 ஆம் ஆண்டு எலிகளையும் உற்பத்தி செய்தனர் சில அறிவியல் அறிஞர்கள். இதன் அடுத்த கட்டம் தான் தற்போது கருப்பை தொழிற்சாலையாக உருவெடுத்துள்ளது. இந்த தொழிற்சாலை குறித்து அல்-கைலி என்பவர் விளக்க வீடியோ ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.

Growth Pods:
அதாவது புதிய குழந்தைகளை உருவாக்கக் கருப்பை தொழிற்சாலை போன்ற ஒன்றை உருவாக்குவதே இவரது திட்டம். ஆணின் விந்தணுவும் பெண்ணின் கருமுட்டையும் இணைவது மட்டுமே இதில் இருக்கும் ஒரே வழக்கமான செயல். இதைத் தவிர மற்ற அனைத்துமே தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. கருவைச் சுமக்கச் செயற்கையாக ஒரு கருவியை உருவாக்க உள்ளன. growth pods என்று அழைக்கப்படும் இதில் தாயின் கருப்பையில் இருக்கும் அதே சூழல் உருவாக்கப்படும். இதனால் குழந்தைகள் பாதுகாப்பான சூழலில் வளரும். இந்த கரு பெண்களின் வயிற்றில் இருப்பதைப் போன்ற செயற்கை அம்னோடிக் திரவத்தில் வளரும்.

கருப்பை போன்றே..:
செயற்கையாக உருவாக்கப்பட்ட தொப்புள் கொடியின் மூலம் துல்லியமாக வடிவமைக்கப்பட்ட ஹார்மோன்கள், ஆன்டிபாடிகள் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான புரதங்கள், ஆக்சிஜன் உள்ளிட்டவை கருவுக்கு அனுப்பப்படும். மற்றொரு குழாய் மூலம் கருவில் இருந்து வெளியே வரும் கழிவுப் பொருட்கள் அகற்றப்படும். மேலும், இப்போது ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பமும் வளர்ந்து வரும் நிலையில், பெற்றோரால் குழந்தையின் குணாதிசயங்களையும் இதில் தேர்ந்தெடுக்க முடியும்.
இதையும் படிக்க: இரவு நேர வீடியோசாட்.. இறுக்கமான உடை... மனைவியை கொன்ற எபியின் 11 பக்க கடிதம்..!
டிராக்கிங்:
குழந்தை வளரும் 9 மாதங்களும் அது எப்படி இருக்கிறது என்பதைப் பெற்றோரால் டிராக் செய்ய முடியும். இதற்காக ஒரு செயலியையும் அவர் உருவாக்க உள்ளாராம். இதன் மூலம் பெற்றோர் எங்கு இருந்தாலும் அங்கிருந்தபடி குழந்தையின் உடல்நிலையை செக் செய்து கொள்ள முடியும். பெற்றோர் விரும்பும் நேரத்தில் விரும்பும் நாளில் ஒரு பட்டனை அழுத்தி, குழந்தையைப் பெற்றெடுக்கலாம். மேலும், ஒரு குழந்தை பெற்றெடுத்த பிறகு மீண்டும் அதே podஐ பயன்படுத்தி எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றெடுக்க முடியும்.

பெண்களுக்காக..:
கற்ப காலத்தில் தாய்மார்கள் படும் துன்பத்தைக் குறைக்கவே இதை உருவாக்கியுள்ளதாகக் கூறும் அல்-கைலி, ஒவ்வொரு ஆண்டும் பிரசவத்தின்போது, சுமார் 3 லட்சம் பெண்கள் உயிரிழக்கும் நிலையில், அது தடுத்து நிறுத்தப்படும். மேலும், குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதும் உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

8000 குழந்தைகள்:
மேலும், பல நாடுகளில் மக்கள்தொகை பெருக்கும் குறைந்துள்ளது. குறிப்பாக ஜப்பான் உட்பட 23 நாடுகளில் மக்கள்தொகை பெருக்கும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த நாடுகளுக்கு இது மிகச் சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் கைலி தெரிவித்திருந்தார். மேலும் இந்த தொழிற்சாலை மூலம் ஒரே இடத்தில் ஆண்டுக்கு 8000 குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும் எனவும் விளக்கியிருந்தார் அல்-கைலி.

மனித இனமே..:
இந்த தொழில்நுட்பம் தற்போது தான் தொடக்க நிலையில் இருந்தாலும் இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதாவது இதன் மூலம், அனைவருமே ஒரே வகையில் குழந்தைகளைப் பெற்றெடுக்க விரும்புவார்கள். இதனால் சிறு இயற்கை பேரிடர் வந்தாலும் மனித இனமே காணாமல் போகிவிடும். அதாவது அனைத்து குழந்தைகளும் ஒரே சூழலில் வளர்க்கப்படுவதால், சிறு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டாலும் அவை மிக எளிதாக அனைவரையும் அழித்துவிடும்" என்று எச்சரிக்கின்றனர்.

அழிவின் தொடக்கப் புள்ளி..:
மேலும், இது குழந்தைக்கும் பெற்றோர்களுக்கும் இருக்கும் பிணைப்பைக் கூட பாதிக்கும் எனச் சிலர் அச்சம் தெரிவிக்கின்றனர். இது மட்டுமின்றி, தாய்ப்பால் உள்ளிட்ட பல விஷயங்களில் இதில் பிரச்சினை வரும் என்றும் இது மனித இன அழிவின் தொடக்கப் புள்ளியாக அமைய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.