திருமண அழைப்பிதழில் "அன்பும் அறனும் உடைத்தயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" போன்ற இல்வாழ்க்கை திருக்குறளை அச்சடிப்பது வழக்கம். ஆனால் இங்கு ஒருவர் திருக்குறள் புத்தகத்திலேயே திருமண அழைப்பிதழை அச்சடித்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
133 அதிகாரங்களும், ஆயிரத்து, 330 குறளும் கொண்டது, திருக்குறள் புத்தகம். அத்துடன் அதன் விளக்கமும் சேர்ந்தால் எவ்வளவு பெரிய புத்தகமாக இருக்கும். இந்த புத்தகத்தில் தான் திருமண அழைப்பிதழை அச்சடித்துள்ளார் தமிழ் மொழி பற்றாளர் ஒருவர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் ரவீந்திரன். 61 வயதான இவர் பஞ்சாலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி ரெங்கநாயகி அரசு பள்ளி ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு குயில்மொழி என்ற மகளும், முகிலன் என்ற மகனும் உள்ளனர். இதில் முகிலனுக்கு வருகின்ற 10-ம் தேதி சேலத்தில் திருமணம் நடைபெற உள்ளது.
இதற்காக, திருமண அழைப்பிதழை வெரும் பேப்பரில் அச்சடிப்பதை விட, அந்த திருமண அழைப்பிதழை பெறுவர்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்று எண்ணிய ரவீந்திரனுக்கு, அழைப்பிதழில் திருக்குறளை அச்சடிப்பதை விட, திருக்குறள் புத்தகத்தில் அழைப்பிதழை அச்சடித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியுள்ளது.
குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் உடனடியாக செயல்படுத்தினார். அதன்படி, உலக பொதுறை திருக்குறளும், அதன் விளக்க உறையுடன் புத்தகம் அச்சடிக்கப்பட்டது. இதில் முதல் பக்கத்தில் மணமக்கள் பெயர், திருமணம் நடைபெறும் இடம், நாள் உள்ளிட்ட விவரங்கள் அச்சடிக்கப்பட்டன. 280 பக்கங்களுடன் இந்த அழைப்பிதழ் புத்தகம் தயாராகியுள்ளது.
திருக்குறள் புத்தகம் மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான ஒரு லட்சம் தமிழ் பெயர்கள் இடம் பெற்றுள்ள மற்றொரு புத்தகமும் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம், 256 பக்கங்களை கொண்டுள்ளது.
இந்த இரண்டு புத்தகங்கங்கள் தான் திருமண அழைப்பிதழாக உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி வருகின்றனர். ஒரு புத்தகத்தை பிரிண்டிங் செய்ய 450 ரூபாய் செலவாகியுள்ளது. மொத்தம் 500 புத்தகங்களை அச்சடித்துள்ளனர். இந்த அழைப்பிதழுக்கே 2 லட்சத்து, 25ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது.
அழைப்பிதழுக்கு இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டுமா என்ற எண்ணம் தோன்றினாலும், மற்ற அழைப்பிதழ்கள் எல்லாம் திருமணம் முடிந்தவுடன் குப்பைக்கு வந்துவிடும் நிலையில் இந்த திருமண அழைப்பிதழ் புத்தகம் நிச்சயம் வீடுகளின் அலமாரிகளை அலங்கரிக்கும் என்பரில் மாற்றுக் கருத்து இல்லை...
திருமணம் போன்ற விழாக்களில் ரிட்டன் கிஃப்ட் கொடுக்கும் போது இப்படி உபயோகம் உள்ள பொருட்களை வழங்கினால் வாங்குபவர்களுக்கும் மகிழ்ச்சி, வழங்குபவர்களுக்கும் மகிழ்ச்சி...சிந்திப்போம்... செயல்படுவோம்...
மாலை முரசு செய்திகளுக்காக ஓசூர் செய்தியாளர் கோபால்...