வருகிற 14 ஆம் தேதி அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்கிறார்...
உதயநிதி அமைச்சர் ஆவாரா?:
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது உதயநிதியின் அமைச்சர் பதவி தான். இதை பற்றி அவரிடமே செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நான் அமைச்சராவதை முதலமைச்சர் தான் முடிவு செய்வார் என்று புன்முறுவலுடன் பதிலளித்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் உதயநிதி இடம் பெறுவாரா? மாட்டாரா? என்று கேள்விகள் உலாவி வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கை வெளியானது:
அந்த அறிக்கையில், முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரையை அடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ள நிலையில் வரும் 14 ஆம் தேதி அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள விழாவில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு அமைச்சராக பொறுப்பேற்பார் என்று ஆளுநர் தரப்பில் வழங்கப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உறுதியானது அமைச்சர் பதவி:
அதன்படி, வரும் 14 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.