அரசியலும் சினிமாவும்
தமிழ் சினிமாவிற்கும் தமிழ்நாடு அரசியலிற்கும் மிகப்பெரிய தொடர்புண்டு, பொதுவாக தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் தலைவர்கள், முதலமைச்சர்கள் என அனைவரும் தமிழ் சினிமாவில் இருந்து வந்தவர்களாக தான் இருப்பார்கள். தமிழ்நாட்டில் அரசியல் தலைவராக வேண்டுமென்றால் அவர்கள் முதலில் திரைத்துறையில் பணியாற்றி இருக்க வேண்டும் என்பதைப் போல கிட்டத்தட்ட இது அரசியலிற்கு வருவதற்கு ஒரு தகுதி போலவே ஆகிவிட்டது.
அறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர்கள். அதே போல எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவில் தொடங்கி இப்போது முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலினும் தமிழ் சினிமாவில் நடிகர்களாக இருந்தவர்கள் தான். அந்த வரிசையில் திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் என தமிழ் சினிமாவில் சிறப்பாக பணியாற்றி வரும் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வென்று தனது அரசியல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கினார்.
அமைச்சராகும் உதயநிதி
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது உதயநிதியின் அமைச்சர் பதவி தான். இதை பற்றி அவரிடமே செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நான் அமைச்சராவதை முதலமைச்சர் தான் முடிவு செய்வார் என்று புன்முறுவலுடன் பதிலளித்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் உதயநிதி இடம் பெறுவாரா? மாட்டாரா? என்று கேள்விகள் உலவி வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது திமுக தலைமை.
நவம்பர் 27-ல் 45 வயதை தொட்ட, திமுகவின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், அடுத்த வாரம் அமைச்சராகவும் பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய துறைகளில் ஒன்றான "சிறப்பு செயல்திட்ட அமுலாக்கத்துறை" உதயநிதிக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.
உதயநிதியின் பயணம்
விஜய் - திரிஷா நடிப்பில் வெளிவந்த குருவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு தயாரிப்பாளராக அறிமுகமானார் உதயநிதி ஸ்டாலின். 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் "Red Giant Movies" என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, திரையுலக தயாரிப்பாளராக பொதுவெளிக்கு வந்தார் உதயநிதி.
நாயகனான தயாரிப்பாளர்
2009ம் ஆண்டு வெளியான ஆதவன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததின் மூலம் திரையில் தோன்றினார். பின்பு 2012ல் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். இது கதிர்வேலன் காதல், மனிதன், நண்பேன்டா, நெஞ்சுக்கு நீதி, கலக தலைவன், மாமன்னன் என்று வரிசையாக பல படங்களில் நடித்துள்ளார்.
அரசியல் ஈடுபாடு
நடிப்பில் ஆர்வம் காட்டி வந்த உதயநிதி ஸ்டாலின், கடந்த 2018 மார்ச் முதல் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். திமுகவின் செயல் தலைவராக 2017ல் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், வெள்ளக்கோவில் சாமிநாதன் இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். பின்பு வெள்ளக்கோவில் சாமிநாதன் குறுகிய காலமே பணியாற்றினார். அதனை தொடர்ந்து 2019ல் உதயநிதி திமுகவின் இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
புதிய பாணியில் உதயநிதி
கடந்த 2019 மக்களவைத் தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக தீவிர பரப்புரையில் ஈடுபட்டார் உதயநிதி ஸ்டாலின். தேர்தல் நேரத்தில் கலைஞரைப் போல் அடுக்குமொழியில் பிரச்சாரம், அனல் கக்கும் பொதுக்கூட்ட பேச்சுக்களையும் திமுகவில் இன்று யாரும் செய்ய முடியாத போது, மாறிவரும் தலைமுறைகளுக்கு ஏற்ப உதயநிதி தனது பிரச்சாரத்தை தனித்துவமான பாணியில் மேற்கொண்டார்.
ஒற்றை செங்கல் எய்ம்ஸ்
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் செய்த பிரச்சாரத்தில் குறிப்பிடத்தக்கது ஒற்றை செங்கல் பிரச்சாரம். "மதுரையில் பிரதமர் மோடி கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்திருக்கிறேன்" என்று கூறி ஒரு செங்கலை காட்டினார். உதயநிதியின் இந்த பிரச்சாரம் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று பெரியளவில் வைரல் ஆனது.
தைரியம் இருந்தா வாங்க
தேர்தல் நேரத்தில் உதயநிதி தங்கை வீட்டில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்ட போது தைரியம் இருந்தா என் வீட்டுக்கே வாங்க என்று சொல்லி அவரது வீட்டின் முகவரியை சொல்லி வருமானவரித்துறையை வீட்டுக்கு அழைத்ததெல்லாம் பிரச்சாரத்தின் உச்சம்.
சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி
அதன் படி, 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அப்போது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 93,285 வாக்குகள் பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். இப்படியாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து வந்தார் உதயநிதி ஸ்டாலின்.
முத்துவேல் கருணாநிதி பேரன்
மே மாதம் 2021 முதல் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலரும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று தீர்மானங்கள், கோரிக்கைகள் என்று பல வடிவில் வலியுறுத்தினர். இந்நிலையில், திமுகவின் உட்கட்சி தேர்தலில் இளைஞரணி செயலாளராக இரண்டாவது முறையாக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, தற்போது அமைச்சராக பொறுப்பேற்கிறார் முத்துவேல் கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின்.
மனமார்ந்த வாழ்த்துகள் உதய்
திரைத்துறையையும், அரசியலையும் நேர்த்தியாக கையாண்டு வரும் உதயநிதி இளைஞர்கள் மனதில் தனி இடத்தை பிடித்ததோடு அவர்களின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்து வருகிறார். தனது அரசியல் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்து அமைச்சராக பயணத்தை தொடங்க இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
- அறிவுமதி அன்பரசன்