கிராம சபை கூட்டத்தில் கருப்பு கொடியுடன் பங்கேற்ற மக்களால் பரபரப்பு...!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதனை நிவா்த்தி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அதன்படி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் சம்பத் நகர் பூங்காவில் நடைபெற்றது. அப்போது அலங்கியம் ரோடு ராம் நகர் பகுதியில் தூய்மை பணியாளர்கள் குப்பைகளுக்கு தீ வைத்து எாித்தபோது எாிந்து சேதமடைந்த வைக்கோல்களுக்கு நஷ்ட ஈடு கேட்டு அப்பகுதி மக்கள் கருப்பு கொடியுடன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். கூட்டத்தில் டெங்கு தடுப்பு உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

ராமநாதபுரம் மாவட்டம் மட்டியாரேந்தல் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது வறட்சி நிவாரண தொகை வழங்கப்படாததை கண்டித்து விவசாயிகள் வயலில் இறங்கி மண்ணை வாரி தூற்றி அதிகாரிகளுக்கு கண்டனம் தொிவித்தனா். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிக்க : சத்தீஸ்கா், தெலங்கானா செல்லும் பிரதமா்...ரூ.23 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட ஆலை அா்ப்பணிப்பு!

இதேபோல் திருப்பத்தூா் மாவட்டம் தேவலாபுரத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் இமாம் நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது பேச்சுவாா்த்தை நடத்தவந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா். 

திண்டுக்கல் மாவட்டம் ஜாதிகவுண்டன்பட்டியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பூங்கொடி பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். 

கோவை மாவட்டம் கம்மாளப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பூவலப்பருத்தியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடையை அகற்றக்கோாி அப்பகுதி மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.