ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய பாதுகாப்பு படையினர் இரண்டாவது நாளாக கொடி அணிவகுப்பு நடத்தினர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே தேர்தலுக்கான இறுதி வேட்பு மனு பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம் 77 வேட்பு மனுக்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து, முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரும் 24, 25 ஆகிய 2 நாட்களும், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வரும் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை 3 நாட்கள் பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துல்ளனர்.
அதேபோல், அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 15, 16, 17, 24, 25 ஆகிய 5 தேதிகளிலும், தென்னரசுவை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், வரும் 13ம் தேதியும் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட 32 வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படையினர் இன்றுமுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கிடையில், மக்கள் எந்தவித பயமுமின்றி வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில், நேற்று துணை ராணுவப் படையினர் துப்பாகி ஏந்தியபடி ராஜாஜிபுரத்தில் இருந்து திருநகர், கிருஷ்ணம் பாளையம் வழியாக கொடி அணிவகுப்பு நடத்தினர். அந்த வகையில் இன்றும் இரண்டாவது நாளாக கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.