மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் உரையின் போது, தமிழ் பழமொழியை கூறிய திமுக எம்.பி. அப்துல்லாவுக்கும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே சுவாரஸ்ய விவாதம் நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாள்தோறும் விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அதானி குழுமம் தொடர்பான விவாதிக்க கூறி தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் மாநிலங்களவையில் திமுக எம்.பி. அப்துல்லா தனது உரையை பழமொழியுடன் தொடங்கினார். அப்போது அவர் கூறிய பழமொழி குறித்து அவருக்கும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே சுவாரஸ்ய விவாதம் நடைபெற்றது.
அதாவது, தனது உரையை தொடங்கிய அப்துல்லா, ’ஆசை இருக்கு தாசில் பண்ண; அதிர்ஷ்டம் இருக்க கழுதை மேய்க்க’ என்ற பழமொழியை மேற்கோள் காட்டினார். அப்போது குறுக்கிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அது ‘கழுதையில்லை ஆடு ‘ என்றார்.
இதற்கு பதிலளித்த அப்துல்லா, ‘திருச்சியில் ஆடாக இருக்கலாம். ஆனால், புதுகோட்டையில் கழுதை தான். ஊருக்கு ஊரு மாறும்’ என்றார். உடனே, குறுக்கிட்ட நிர்மலா சீதாராமன் ‘ அதெல்லாம் ஊருக்கு ஊர் மாறாது ஆடுதான் சரி’ என்றார். பின்னர் தனது உரையை படித்த அப்துல்லா ஆடு என்றே கூறினார். இந்த விவாதம் மாநிலங்களவையில் சற்று கலகலப்பை ஏற்படுத்தியது.
இந்த சுவாரஸ்ய விவாதம் குறித்த வீடியோவை திமுக எம்.பி.அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. கழுதையா? ஆடா? என்ற விவாதத்தில் ஆடு தான் ஜெயித்தது என்று இணையவாசிகள் கிண்டலாக விமர்சித்து வருகின்றனர்.