யானை பாகன்களை தாய்லாந்தின் பயிற்சி முகாமுக்கு அனுப்ப அரசு முடிவு..! சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு...!

யானை பாகன்களை தாய்லாந்தின் பயிற்சி முகாமுக்கு அனுப்ப அரசு முடிவு..! சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு...!
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் யானைகள் முகாம்களில் உள்ள பாகன்களை, 50 லட்சம் ரூபாய் செலவில் தாய்லாந்தின் யானைகள் பாதுகாப்பு மையத்தில், பயிற்சி பெற அனுப்பி வைப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆனைமலை, முதுமலை சரணாலயங்களில் உள்ள யானைகளை சிறந்த முறையில் பராமரிக்க, வனத்துறையைச் சேர்ந்த 13 பாகன்கள், வனச்சரகர் ஆகியோருக்கு தாய்லாந்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மையத்தில் வழங்கப்படும் பயிற்சிக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்காக ஆனைமலை மற்றும் முதுமலை சரணாலய நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கி நவம்பர் 21ம் தேதி உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வனவிலங்கு ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், யானைகளை அடக்குவதிலும், பயிற்சி அளிப்பதிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக திறமை வாய்ந்தவர்களாக உள்ள நிலையில், சிறிய நாடான தாய்லாந்துக்கு பயிற்சி பெற அனுமதிப்பது தேவையற்றது எனக் கூறப்பட்டுள்ளது. யானைகளுக்காக சிறந்த முகாம்களும், விருது பெற்ற பாகன்களும் தமிழகத்தில் உள்ளதாகவும், தாய்லாந்து பயிற்சிக்காக செலவிடப்பட உள்ள தொகையை மூத்த பாகன்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள வன முகாம்களில் யானைகளுக்காக சிறப்பு மருத்துவமனைகள் அமைக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது,  எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தை முறையாக பராமரிக்க கோரிய வழக்கு நிலுவையில் உள்ளதாக மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கையும், எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையம் தொடர்பான வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், இரு வழக்குகளின் விசாரணையையும் டிசம்பர் 14ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com