40 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்டது...இப்போ அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

40 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்டது...இப்போ அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

40 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சாமி சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

40 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட சிலை:

நாகை மாவட்டம் பண்ணைத்தெருவில் அருள்மிகு பண்ணார பரமேஸ்வர சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்த வெண்கல விநாயகர் சிலை ஒன்று, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோனதாக கோவில் காவலாளி பாலு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். 

இதையும் படிக்க: முழுசா தென்னிந்திய நடிகரா மாறிய சியானை பார்.... !

விசாரணையில் வெளியான தகவல்:

அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், காணாமல் போன விநாயகர் சிலையின் புகைப்படத்தை பெற புதுச்சேரி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்றனர். அப்போது பண்ணார பரமேஸ்வர கோவிலில் இருந்து விநாயகர் சிலை மட்டுமின்றி சோமஸ்கந்தர், சந்திரசேகர அம்மன், நடன சம்பந்தர் உட்பட 11 சிலைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. 

சிலையை வாங்கிய அருங்காட்சியகம்:

தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தேவி சிலை நியூயார்க்கில் உள்ள அருங்காட்சியத்தில் இருப்பதையும், அந்த சிலையை 50 ஆயிரம் டாலருக்கு அருங்காட்சியகம் வாங்கியதும் கண்டறியப்பட்டது.

பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்:

இதேபோல் மற்றொரு சிலையான விநாயகர் சிலை அமெரிக்காவின் நார்டன் சைமன் அருங்காட்சியகத்தில் இருப்பதையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டு பிடித்துள்ளனர். பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூருக்கு இதில் தொடர்பு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

விரைவில் தமிழகம்:

இதையடுத்து, கடத்தப்பட்ட சிலைகளை விரைவில் அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வந்து, நாகையில் உள்ள பண்ணார பரமேஸ்வர கோவிலில் வைக்க உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மற்ற 9 சிலைகளையும் மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறினர்.