R.B.V.S. மணியனின் நீதிமன்ற காவலை அக்டோபர் 11-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு..!

Published on
Updated on
1 min read

அண்ணல் அம்பேத்கர்,  திருவள்ளுவர், உள்ளிட்டோர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் R.B.V.S. மணியனின் நீதிமன்ற காவலை அக்டோபர் 11-ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 11-ம் தேதி சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர்  ஆர்.பி.வி.எஸ். மணியன், அண்ணல் அம்பேத்கர், திருவள்ளுவர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக அவர்மீது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா. செல்வம் புகார் அளித்தார். 

இதனைத்தொடர்ந்து, மணியன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் செப்டம்பர் 14-ஆம் தேதி அதிகாலையில் மணியன் கைது செய்யப்பட்டார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணியனின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று  நீதிபதி அல்லி முன்பு அவர்  ஆஜர்படுத்தபட்டார். 

அப்போது,  இதுபோன்ற கருத்துகளை இனி வரும் காலங்களில் தெரிவிக்க மாட்டேன் என நீதிபதியிடம் மணியன் மன்னிப்பு கோரினார். மேலும், தன்னுடைய வயது மற்றும் உடல் நலனை கருத்தில் கொண்டு தனக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, மணியனின் நீதிமன்ற காவலை மீண்டும்  அக்டோபர் 11ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com