பள்ளியில் சாதிய பாகுபாடு... படித்தது போதுமென குழந்தைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்!!

Published on
Updated on
1 min read

ஊராட்சி ஒன்றிய பள்ளியில், சாதிய பாகுபாடு பார்த்து, காலை உணவுத் திட்டத்தில் பணியாற்றி வந்த இருவரை, பணியை விட்டு துரத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், மாமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டிப்பளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தமிழக அரசு கொண்டுவந்த காலை சிற்றுண்டி உணவிற்கு, மகளிர் திட்டத்தின் மூலம் அப்பகுதியை சேர்ந்த மூன்று நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் ஆண்டிப்பாளையம் அடலின் ரெக்சி , செல்வராணி, பரமேஸ்வரி என மூன்று பேர் காலை உணவு திட்டத்தின் கீழ் சமையல் செய்து கொடுத்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், நேற்று திடீரென அடலின் ரெக்சி மற்றும் செல்வராணி இருவரையும் பணி செய்ய வேண்டாம் என கூறியதாக அறியப்படுகிறது. இந்த தகவல் அந்தப் பகுதியில்  காட்டுத் தீ போல பரவியது.
இதனை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ஒன்று சேர்ந்து வந்து, எங்கள் பகுதியை சேர்ந்தவருக்கு வேலை இல்லை என்றால் எங்கள் குழந்தைகளை இங்கே படிக்க வைக்க மாட்டோம், நாங்கள் வேறு பள்ளியில் படிக்க வைத்துக் கொள்கிறோம் எனக் கூறியதுடன், பள்ளியில் சாதி பாகுபாடு இருப்பதாக கூறி குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தகவல் அறிந்த சோழத்தரம் காவல்துறையினர், மற்றும் கல்வி அதிகாரிகள் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சம்பவ இடத்திலிருந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை செய்து வருகிறார்கள்.

மேலும் தொடர்ந்து காட்டுமன்னார்கோயில் பகுதியில் ஏற்கனவே குருங்குடி என்ற கிராமத்திலும் சிறுகாட்டூர் என்ற கிராமத்திலும் இதுபோல் சம்பவம் நடந்துள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டு வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com