பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு - அமைச்சர் உதயநிதி பேட்டி!

பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு - அமைச்சர் உதயநிதி பேட்டி!

Published on

முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு  உடனடியாக தீர்வு காணப்படுகிறது என்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்த இல்லமான நாகை மாவட்டம் திருக்குவளை இல்லத்திற்கு,  தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை புரிந்தார். அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக கலைஞர் பிறந்த இல்லத்திற்கு வருகைதந்த உதயநிதிக்கு திமுக நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையிலான திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பின்னர் திருக்குவளை இல்லம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞரின் தாய் தந்தை அஞ்சுகம் முத்துவேல் , மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன், மறைந்த தமிழக முதலமைச்சர் கலைஞர் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து கலைஞர் இல்ல நினைவகத்தில் குறிப்பெழுதிய அமைச்சர் உதயநிதிஸ்டாலின், விடியலை நோக்கி பிரச்சாரத்தில் கடந்த ஆட்சியில் இதே கலைஞர் இல்லம் முன்பு கைதானேன். தற்போது அமைச்சராக வந்துள்ள தருணம் மகிழ்ச்சி அளிக்கிறது. மறைந்த முதல்வர் கலைஞர் மற்றும் தற்போதைய முதல்வர் வழியில் மக்கள் பணியாற்றுவேன் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும்   தற்போதைய முதலமைச்சர் ஆகியோரின் வழியில் பணியாற்றுவேன் என்று  கூறினார். முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு  உடனடியாக தீர்வு காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com