தொடரும் மாணவர்களின் தற்கொலை...ஐ.ஐ.டி.அளித்த விளக்கம்...அறிக்கை வெளியிட்ட நெல்லை முபராக்!

தொடரும் மாணவர்களின் தற்கொலை...ஐ.ஐ.டி.அளித்த விளக்கம்...அறிக்கை வெளியிட்ட நெல்லை முபராக்!

சென்னை  ஐ.ஐ.டி.யில் தொடரும் மாணவர்களின் தற்கொலைகளுக்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் அளித்த விளக்கம் ஏற்புடையதல்ல என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்களின் தற்கொலை தொடர் கதையாகி வருவதால், இது குறித்தி ஐ.ஐ.டி நிர்வாகம் விளக்கமளித்தது. அதில், கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு, மாணவர்கள் பல்வேறு சமூக அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாகவும், பிரச்னைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் தற்கொலைகளை தடுக்க முடிவதில்லை எனவும் ஐ.ஐ.டி நிர்வாகம் விளக்கமளித்திருந்தது. 

இந்நிலையில் மாணவர்களின் தற்கொலைக்கு ஐ.ஐ,டி நிர்வாகம் அளித்த விளக்கம் ஏற்புடைய்தாக இல்லை என்று கூறி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை  ஐ.ஐ.டி.யில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த புஷ்பக் ஸ்ரீ சாய் என்ற மாணவர் விடுதி அறையில் நேற்று (மார்ச்.14)  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பாக இதே சென்னை ஐஐடியில் எம்.எஸ். எலெக்ட்ரிக்கல் இன்ஜினீரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டீபன் சன்னி ஆல்பர்ட் என்ற மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் மற்றொரு மாணவர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

இந்த சூழ்நிலையில், மாணவர்களின் தற்கொலைக்கு பொருளாதாரம், குடும்பப் பிரச்சனை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் அவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க முடிவதில்லை என சென்னை ஐ.ஐ.டி. விளக்கம் அளித்துள்ளது. மாணவர்களின் தற்கொலைகளுக்கு மன அழுத்தம் தான் காரணம்  என்றாலும், சென்னை ஐஐடி குறிப்பிடுவது போன்று அது குடும்பம் மற்றும் பொருளாதார பிரச்சனைகளால் மட்டும் ஏற்படுவதில்லை. அதற்கு அங்கு நிலவும் பல்வேறு வகையான சாதி, மத ஒடுக்குமுறைகளும், மாணவர்களுக்கு அளிக்கப்படும் நெருக்கடிகளும் தான் காரணம் என்பதை மறுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

ஐ.ஐ.டி. உள்ளிட்ட மத்திய அரசின் பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களில் சாதி, மத ரீதியிலான பாகுபாடு என்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இடஒதுக்கீட்டுக்கு எதிரான உணர்வுகளை தூண்டி தகுதியில்லாதவர்கள், தகுதியற்றவர்கள் என்று கேலி செய்வதன் மூலம் பட்டியலின மாணவர்கள் மனரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள் என்றும், மாணவர்களுக்கு மட்டுமின்றி பேராசிரியர்களிடமும் கூட சாதிய பாகுபாடு காட்டப்படுகின்றது என்பது குறித்த பல்வேறு புகார்கள் இன்றும் இருப்பதாக தெரிவித்துள்ளார்,

மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை விவகாரத்தில், தனது தற்கொலைக்கு  பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என்று மாணவி பாத்திமா லத்தீஃப் தெளிவாக குறிப்பெழுதி வைத்த பின்னும், குறிப்பிட்ட அந்த பேராசிரியரை விசாரணைக்கு கூட அழைக்கவில்லை, அவர் மீது எவ்வித  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழல் நிலவும் சென்னை ஐ.ஐ.டியில்  தொடரும் தற்கொலைகளுக்கு மாணவர்களின் குடும்ப சூழல், பொருளாதாரத்தால் ஏற்படும் மன அழுத்தம் தான் காரணம் என்று சொல்லி, தற்கொலைகளுக்கு மாணவர்கள் மீது பழி சுமத்தி தப்பிக்கும் ஐ.ஐ.டி. போக்கு ஏற்புடையதல்ல என்றும் சாடியுள்ளார். 

ஐ.ஐ.டி. உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் உயிர்களை காவு வாங்கும் இடமாக மாறுவதற்கு அங்கு நிலவும் சாதி, மத ரீதியிலான ஒடுக்குமுறையை தடுத்து நிறுத்தாததும், அரசுகள் அதனை கண்டும் காணாமலும் இருப்பது தான் காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆகவே, ஐ.ஐ.டி. உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் மாணவர்களின் தற்கொலை மரணங்களை தடுத்து நிறுத்த ஒன்றிய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றச்சாட்டிற்கு ஆளாகும் பேராசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு சிவில் சமூகத்தினரை உட்படுத்தி குழு அமைத்து தற்கொலைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.