முதல் நாள் இயக்கப்பட்ட பொங்கல் சிறப்பு பேருந்துகள்...பயணிகளின் கருத்து என்ன?

முதல் நாள் இயக்கப்பட்ட பொங்கல் சிறப்பு பேருந்துகள்...பயணிகளின் கருத்து என்ன?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல் நாள் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் நள்ளிரவை கடந்தும் பயணித்த பயணிகள் உடனுக்குடன் பேருந்துகள் இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

முதல் நாள் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் :

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பேருந்து மற்றும் ரயில் நிலையத்திற்கு படையெடுத்து செல்வார்கள். இதனால் ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு வசதியாகவும், போக்குவரத்தை எளிமையாக்கவும் தமிழக அரசு சார்பில் நேற்றைய தினம் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

நள்ளிரவை கடந்தும் பயணிகள் பயணம் :

இந்நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நள்ளிரவை கடந்தும் சிறப்பு பேருந்துகளில் பயணிகள் பயணித்தனர். குறிப்பாக, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் கணிசமான பயணிகள் பயணித்தனர்.

இதையும் படிக்க : கல்லூரி இல்லாத தொகுதிக்கு தான் முன்னுரிமை...அமைச்சர் பொன்முடி பதில்...!

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பயணிகள், பேருந்துகள் உடனுக்குடன் கிடைப்பதாகவும், அதனால் பிரச்சினையில்லாமல் பயணிப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, நேற்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது முதல் நாள் என்பதால் குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே பயணித்துள்ளதாகவும், இன்றைய தினம் பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படும் எனவும் போக்குவரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.