கல்லூரி இல்லாத தொகுதிக்கு தான் முன்னுரிமை...அமைச்சர் பொன்முடி பதில்...!

கல்லூரி இல்லாத தொகுதிக்கு தான் முன்னுரிமை...அமைச்சர் பொன்முடி பதில்...!

எந்த தொகுதியில் அரசு கல்லூரிகள் இல்லையோ அந்த தொகுதியில் முன்னுரிமை அடிப்படையில் அரசு கலைக்கல்லூரிகள் அமைக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

கடைசி நாள் பேரவைக்கூட்டம் :

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை அன்றைய தினம் ஆளுநர் உரையால் சர்ச்சையுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்று வந்த சட்டப்பேரவையின் கடைசி நாளாக இன்றும் சட்டப்பேரவை கூடியது. 

முதல் நிகழ்வு :

இதில் முதல் நிகழ்வாக, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மற்றும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ உக்கரபாண்டி ஆகியோர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து வினாக்கள்  விடைகள் நேரம் தொடங்கியது.

கலைக்கல்லூரி அமைப்பது குறித்து கேள்வி :

அப்போது, செங்கம் தொகுதியில் புதிதாக அரசு கலைக்கல்லூரி அமைப்பது குறித்து சட்டமன்ற உறுப்பினர் கிரி கேள்வி எழுப்பினார். அதற்கு  பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, அனைத்து சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதிக்கு கல்லூரி வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரையிலும் 8 தொகுதி இருப்பதால், 8 அரசு கல்லூரிகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அந்த பகுதியில் ஏற்கனவே, 3  கல்லூரிகள் இருப்பதாகவும், 
செங்கத்தில் மட்டும் 4 சுயநிதி கல்லூரிகள் இருப்பதாகவும் தெரிவித்த அவர், மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து தான் கல்லூரிகள் புதிதாக அமைக்கப்படும் என்றார்.  

அமைச்சரின் பதில் :

தொடர்ந்து, எந்த தொகுதியில் அரசு கல்லூரிகள் இல்லையோ, அந்த தொகுதியில் முன்னுரிமை அடிப்படையில் அரசு கலைக்கல்லூரிகள் அமைக்கப்படும் எனவும், அரசின் நிதிநிலையை அறிந்துக்கொண்டு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

இதையும் படிக்க : 6 யூடியூப் சேனல்கள் திடீர் முடக்கம்...மத்திய அரசு அதிரடி நடவடிக்கை...!

திருவண்ணாமலை மாவட்டம் தான் கல்வியில் பின் தங்கிய மாவட்டம், செங்கம் சட்டமன்றத் தொகுதியில் பிற தொகுதியைப் போல் பார்க்காமல் செங்கம் தொகுதிக்கு கல்லூரி அறிவிக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் கிரி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, 

முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, மாணவர்கள் எண்ணிக்கையை பொருத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சுயநிதி கல்லூரிகளை விட அரசு கல்லூரிகளை விரும்புகிறார்கள் என்பது உண்மை என்று தெரிவித்த அமைச்சர், செங்கம் தொகுதிக்கு  வருங்காலத்தில் அரசின் நிதிநிலை அறிக்கைக்கு ஏற்ப இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.