அனுமதியின்றி கட்டப்பட்ட 2ம் தளம்...அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

அனுமதியின்றி கட்டப்பட்ட 2ம் தளம்...அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

சென்னை போரூரில் உள்ள கட்டடத்தில், அனுமதியின்றி கட்டப்பட்ட இரண்டாவது தளத்தை 8 வாரத்தில் இடிக்க வேண்டுமென மாநகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை போரூர் ஜெயபாரதி நகரில் செங்கன் என்பவருக்கு சொந்தமான கட்டத்தில், உரிய அனுமதியின்றி 2வது தளம் கட்டப்பட்டுள்ள நிலையில், அதற்கும்மேல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொபைல் டவர் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறி, இதற்கு அனுமதிக்கக்கூடாது என்று சென்னை மாநகராட்சி மற்றும் அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்ற கோரிக்கையுடன், ஜெயபாரதி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதையும் படிக்க : தமிழ்நாட்டில் வாக்காளர் எண்ணிக்கை சரிவு... இந்திய தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியீடு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தபோது, கட்டட உரிமையாளர் செங்கன் தரப்பில், இரண்டாவது தளத்தை வரையறை செய்யும்படி, அரசிடம் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இரண்டாவது தளம் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது உறுதியாவதால், அந்த தளத்தை 8 வாரத்துக்குள் இடிக்க வேண்டுமென சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.