பிரதமா் மோடி ஆட்சியில் அதானி குடும்பம் மட்டுமே வாழ்ந்ததாக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் விமா்சித்துள்ளாா்.
மயிலாடுதுறை மாவட்டம் சீனிவாசபுரத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரர் கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மாநாடு எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் அதிமுக மாநாடு நடைபெற்றதாக குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், மாநாட்டில் அரசியல் மற்றும் கொள்கை என எதுவும் பேசாமல் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி மட்டுமே நடைபெற்றதாகும், அது மாநாடு இல்லை வெறும் கேலிக்கூத்து எனவும் விமா்சித்தாா்.
இதையும் படிக்க : மதுரை ரயில் விபத்தில் உயிாிழந்த 9 பேரின் உடல்கள் சென்னை வந்தது...!
அதிமுக மாநாடு குறித்து ஊடகங்களில் புளி சாதம், தக்காளி சாதம் நன்றாக இருந்ததா என செய்திகள் வந்ததாகவும் , இரு தினங்களுக்கு முன்பு அதிமுக நிர்வாகி தனது மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், இதற்கு முதலில் விசாரணைக்கு அழைப்பது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தான் என்றும் , அவர்தான் மாநாட்டிற்கு பொறுப்பு வகித்ததாகவும் நகைச்சுவையாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமா் மோடி ஆட்சியில் அதானி குடும்பம் மட்டுமே வாழ்ந்ததாக சாடிய அவா், ஒன்பது வருட ஆட்சியில் பாஜக மக்களுக்கு என்ன செய்தது என கேள்வி எழுப்பினாா்.