#EXCLUSIVE | ”இன்று மதியத்திற்குள் மின்சாரம் சீராகும்...” அமைச்சர் செந்தில் பாலாஜி

#EXCLUSIVE | ”இன்று மதியத்திற்குள் மின்சாரம் சீராகும்...” அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மாண்டஸ் புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து கண்காணிப்பு மையத்தில் ஆய்வு நடத்தினார். 

பின்னர் மாலை முரசுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 355 துணை மின் நிலையங்களில், 10 துணை மின் நிலையங்களில் மட்டுமே மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடுமையான மழை, மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மட்டுமே, அந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

மின்வாரிய பணியாளர்கள் நேற்று இரவு முதல் சென்னையில் மட்டும்  1100 பேரும், தமிழகத்தில் மொத்தம் 11 ஆயிரம் பணியாளர்களும் களத்தில் இருந்து பணியாற்றி வருகிறார்கள் என்றார்.

மேலும் பேசிய அவர், அதிகாலை தொடங்கி மின் விநியோகம் நிறுத்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, பாதிப்பு இருக்கும் பகுதிகளில் அதனை சரிசெய்து, இன்று மதியத்திற்குள் அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின் விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளை களத்தில் பணியாளர்களும், அலுவலர்களும் தீவிரமாக செய்து உள்ளனர். சென்னையில் ஒரு இடத்தில் ஆர்.எம்.யூ மேல் மரம் விழுந்துள்ளது. அதை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அதை சரிசெய்த பின்னர், கணக்கெடுத்து மொத்தமாக பாதிப்புகள் குறித்து தெரிவிக்கப்படும் எனவும் மின்னகத்திற்கு நேற்று ஒரு நாள் மட்டும் 26251 அழைப்புகள் வரை வந்துள்ளது. அவற்றை உடனுக்குடன் மின்துறை பணியாளர்கள் சரிசெய்து கொடுத்து  வருகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார். 

களத்தில் உள்ள பணியாளர்களுக்கு   தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். புயலால் மின் மாற்றிகள், கம்பங்கள் உள்ளிட்டவை விரைவாக மாற்றப்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.  மொத்த சேதம் குறித்த விவரம் கணக்கெடுக்கப்பட்டு தெரிவிக்கப்படும் என கூறினார்.

இதையும் படிக்க : பன்னாட்டு, உள்நாட்டு விமான சேவைகள் ரத்து...!