குருத்தோலை ஞாயிறு இன்று கோலாகல கொண்டாட்டம்...ஊர்வலமாக சென்ற கிறிஸ்துவர்கள்!

குருத்தோலை ஞாயிறு இன்று கோலாகல கொண்டாட்டம்...ஊர்வலமாக சென்ற கிறிஸ்துவர்கள்!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியப்படி கீர்த்தனைகள் பாடியவாறு பவனியாக சென்றனர். அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைந்ததை  நினைவுபடுத்தும் விதமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கு மக்கள் குருத்தோலையை கையில் பிடித்தவாறு பவனி சென்றனர். மேலும் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயம், அந்தோணியார் கோவில் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது.

இதேபோன்று இராமநாதபுரம் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில், கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு கடைப்பிடிக்கும் தவக் காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதையடுத்து தவக்காலத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை, குருத்தோலை ஞாயிறு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், குருத்தோலையை கைகளில் ஏந்திய படியே கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் அருகே உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com