இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றி மாவட்ட மற்றும் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் காலியிடங்களை பள்ளி மேலாண்மை குழு வாயிலாக 4 மாதத்திற்கு மட்டும் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா காலத்தில் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பு மற்றும் இடைவெளியை சரிசெய்வதற்காக தொடங்கப்பட்ட இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டப் பணிகளை மேற்கொள்ளுவதற்காக ஒரு ஆசிரியர், மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பாளரும், ஒன்றிய அளவில் ஒருங்கிணைப்பாளரும் செயல்பட்டு வருகின்றனர்.
எனவே பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்காத வகையில், தேவைப்படும் பட்சத்தில் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் தற்காலிக ஆசிரியர்களை இக்கல்வியாண்டு முடியும் வரை ஜனவரி 2023 முதல் ஏப்ரல் 2023 வரை 4 மாதங்களுக்கு பணி அமர்த்தப்பட வேண்டும். ஜனவரி 2023 முதல் ஏப்ரல் 2023 வரை 4 மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக பள்ளி மேலாண்மைக் குழுவின் வாயிலாக தேர்வு செய்யப்பட வேண்டும். இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலருக்கு தகுதியுடையவராயிருப்பின் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
தற்காலிகமாக நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000 வீதம் மதிப்பூதியம் என்பதை தெரிவிக்க வேண்டும். இல்லம் தேடிக் கல்வி பணிகளில் ஈடுபட்டிற்கும் ஆசிரியர்கள் தங்கள் பணியை முடித்து எப்போது பள்ளிக்கு திரும்பினாலும், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பப்படும் இந்த தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக பணிவிடுவிப்பு செய்யப்பட வேண்டும். தற்காலிக ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் பணியினை ஜனவரி 9 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : குடியரசு தின விழா அணிவகுப்பு...! தமிழக அலங்கார ஊர்தி தேர்வு...!