சிறப்பு வாய்ந்த இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்கு கிடைத்த பாக்கியம் - அமைச்சர் நெகிழ்ச்சி உரை

சிறப்பு வாய்ந்த இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்கு கிடைத்த பாக்கியம் - அமைச்சர் நெகிழ்ச்சி உரை

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டை உறுதி செய்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் - அமைச்சர் மா.சுப்ரமணியன்
Published on

வரவேற்பு விழா

சென்னை மருத்துவக்கல்லூரியில் "மிளிர்" முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர் வரவேற்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான பாட புத்தகத்தை அமைச்சர் வெளியிட்டு ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். 


எனக்கு கிடைத்த பாக்கியம்

இதையடுத்து சென்னை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கியினை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வழங்கினார். அதனை தொடர்ந்து மேடையில் உரையாற்றிய அவர், சென்னை மருத்துவக்கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் வணக்கம். இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்கு கிடைத்த பாக்கியம். 


வருத்தம் தெரிவித்த அமைச்சர்

நிகழ்ச்சி தாமதமாக தொடங்கியதற்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். நேற்று நடைபெற்ற பேருந்து விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க செங்கல்பட்டு சென்றேன், அதனால் தாமதமாகிவிட்டது. பெற்றோருக்கும் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

300 வயதை தாண்டிய மருத்துவக் கல்லூரி

இந்தியாவில் 2-வது தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரியான சென்னை மருத்துவக்கல்லூரி 1835-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனையின் வயது 300 ஆண்டுகளுக்கு மேலானது. பேராசிரியர் மருத்துவர் சாரதா, டி.எஸ்.கனகா, அடையாறு புற்றுநோய் நிபுணர் மருத்துவர் வி.சாந்தா, நீரழிவு நோய் பாதிப்பை உலகறிய செய்த ஷேசையா உள்ளிட்ட புகழ்பெற்ற மருத்துவர்கள் இந்த மருத்துவக்கல்லூரியில் பயின்றவர்கள்.

7.5% இடஒதுக்கீடு

தமிழ்நாடு முதல்வர் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளில் மருத்துவத்துறையை மேம்படுத்தி வருகிறார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டை உறுதி செய்தவர் தமிழ்நாடு முதலமைச்சர். 
அரசு பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு மட்டும் எம்.பி.பி.எஸ். 459, பல் மருத்துவம் 106 என மொத்தம் 565 பேர் தேர்வாகி உள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக மருத்துவக்கல்லூரி உள்ளது. 


தமிழ்நாட்டிற்கு புதிய மருத்துவக்கல்லூரிகள்

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் இடம் ஒட்டுமொத்தமாக 71 மருத்துவக்கல்லூரி உள்ளன. தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைக்க அனுமதி கோர இருக்கிறோம்.

அதற்கான முயற்சியில் தமிழ்நாடு முதல்வர் ஈடுபட்டு வருகிறார். அங்கேயும் மருத்துவக்கல்லூரி அனுமதிக்கப்பட்டால் இந்தியாவிலேயே அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரி உள்ள மாநிலமாக தமிழ்நாடு மாறும் என்று கூறினார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com