ஆளுநர்களுக்கு வலியுறுத்திய டி கே எஸ் இளங்கோவன்

ஆளுநர்களுக்கு வலியுறுத்திய டி கே எஸ் இளங்கோவன்

ஆளுநர்கள் அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என திமுக செய்தி தொடர்பு தலைவர் டி கே எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

ஒப்புதல் வழங்காத ஆளுநர்:

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கவில்லை.

மாநில அரசுக்கு கேள்வி:

ஆன்லைன் சட்டமசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநர், அதற்கு பதிலாக மசோதா தொடர்பான சில விளக்கத்தை அரசிடம் கேட்டிருந்தார். அதில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா?
என்றும் இதற்கு முன்பாக கொண்டு வரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு நீதிமன்றம் கேட்ட சில கேள்விகளையும் ஆளுநர் குறிப்பிட்டிருந்ததார்.

விளக்கம் அளித்த மாநில அரசு:

ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதிலளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியது. அந்த விளக்கத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்துவருகிறார். 

இதையும் படிக்க: ஆன்லைன் மசோதாவுக்கு விரைவில் ஒப்புதலா? ஆளுநரை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சொன்னது என்ன?

ஆளுநரை சந்தித்த ரகுபதி:

இதனைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று காலை நேரில் சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, ஆளுநரிடத்தில் சட்டம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளதாகவும், சட்டத்தில் சில சந்தேகங்கள் உள்ளது அதனை தெளிவுப்படுத்திக்கொண்டு விரைவில் ஒப்புதல் வழங்குவதாக ஆளுநர் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

டி.கே. எஸ் பேட்டி:

இந்நிலையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதையும் படிக்க: ”வாரிசு” படத்தின் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா? வெளியான அப்டேட்...குஷியில் ரசிகர்கள்!

லாட்டரி சீட்டுகள் தடை:

அப்போது பேசிய அவர், ஆன்லைன் ரம்மி குறித்த அவசர சட்ட மசோதா தொடர்பாக, அமைச்சர் ரகுபதி நேரில் சென்ற போது அதை நிறைவேற்றி தருவதாக ஆளுநர் தெரிவித்து இருப்பதாகவும், அவரிடம் ஏதோ உறுதி கொடுத்திருப்பதாகவும் தெரிவித்ததாக கூறினார். மேலும் ஆன்லைன் ரம்மியினால் தமிழகத்தில் 34 பேர் உயிரிழந்த நிலையில் மக்களின் நலன் கருதி ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, தமிழகத்தில் மக்களின் நலன் கருதி லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் கேரளத்தில் தற்பொழுதும் கூட லாட்டரி சீட்டு என்பது இருக்கிறது என்றார். 

ஆளுநர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்:

தொடர்ந்து பேசிய அவர், பாஜக ஆளாத எல்லா மாநிலங்களும் ஆளுநரின் தலையீடு என்ற பிரச்சனையை சந்தித்து வருவதாக கூறிய அவர்,  ஆளுநர்கள் அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.