
தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 29 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.
முத்தரசன் பேட்டி:
சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழ்நாட்டில் ஆளுநராக பொறுப்பேற்று செயல்பட்டு வரும் ஆர்.என் ரவி, அந்த பொறுப்பில் இருந்து செயல்படாமல் அரசியல் கட்சி தலைவரைப் போல பகிரங்கமாக செயல்பட்டு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருவதாகவும், மதச் சார்பின்மைக்கு நேர்மாறாக செயல்படுவதாகவும் விமர்சித்தார்.
கிடப்பில் உள்ள மசோத்தாக்கள்:
தொடர்ந்து பேசிய அவர், பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மக்கள் நலனுக்காக தான் நிறைவேற்றப்படுகிறது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் உள்ள நிலையில், சனாதனம் தான் நாட்டை ஒற்றுமைப்படுத்தும் என கூறுகிறார், சனாதனத்தை ஏற்று கொண்டவர்கள் கூட இப்படி கூறியதில்லை எனக் கூறிய அவர், மத சார்பற்ற நாடு என அரசியலமைப்பை ஏற்று கொண்டவர் ஆளுநர் எனக் கூறினார்.
முற்றுகைப் போராட்டத்திற்கு அழைப்பு:
தொடர்ந்து பேசிய அவர், தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வருகின்ற டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளதாகவும், அகில இந்திய பொது செயலாளர் டி.ராஜா தலைமையில் போராட்டம் நடைபெற இருப்பதாகவும் அனைவரும் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் எனவும் முத்தரசன் வேண்டுகோள் விடுத்தார்.