காற்றில் கலந்த கால் பந்தாட்ட வீராங்கனையின் கனவு...கண்ணீர் மல்க நல்லடக்கம்!

காற்றில் கலந்த கால் பந்தாட்ட வீராங்கனையின் கனவு...கண்ணீர் மல்க நல்லடக்கம்!
Published on
Updated on
1 min read

தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் உடல் சென்னை செனாய் நகர் கல்லறைத் தோட்டத்தில் உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கண்ணீர் அஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மாணவி உயிரிழப்பு:

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி பிரியா. கால்பந்து விளையாட்டில் கொண்ட அதீத ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் பல வென்றவர். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக சென்னை கொளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  அவரின் கால்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதால்  பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பேரிடியாக விழுந்த மகளின் இறப்பு:

மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என  உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில்  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி மாணவி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். மகள் வீடு திரும்புவார் என நம்பிக்கையுடன் காத்திருந்த அவரது பெற்றோருக்கு பிரியாவின் மரண செய்தி பேரிடியாக விழுந்தது. 

கதறி அழுத நண்பர்கள்:

பின்னர்  உடற் கூறாய்வுக்கு  பிறகு மாணவி பிரியாவின் உடல் வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பிரியாவின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். உடன் படித்த நண்பர்கள்  கதறி அழுத காட்சி அனைவரையும் கலங்க வைத்தது.

நல்லடக்கம் செய்யப்பட்டது பிரியாவின் உடல்:

இதன் பின்னர், கால்பந்தாட்ட வீராங்கனையும், கல்லூரி மாணவியுமான பிரியாவின் உடல் சென்னை ஷெனாய் நகரில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் உடன் பயின்றவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரின் கண்ணீர் அஞ்சலியுடன் பிரியாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரியா பயன்படுத்திய கால்பந்து, அவரது ஷூக்கள் உள்ளிட்டவை அவருடன் அடக்கம் செய்யப்பட்டது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com