கடந்தாண்டு அரசுப்பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வாரந்தோறும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி அளவில் வெற்றிப் பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டனர். அதில் சிறப்பாக பதிலளித்த மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் துபாய்க்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அப்போது கொரோனா பரவல் அதிகமாக இருந்ததன் காரணமாக அந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், அப்போது தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும், 11ம் வகுப்புக்கு தேர்ச்சிப் பெற்று சென்றுவிட்ட நிலையில், அவர்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில், தற்போது துபாய்க்கு கல்விச் சுற்றுலாவிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களுடன், இணை இயக்குனர் அமுதவல்லி உள்ளிட்ட அதிகாரிகள், 5 ஆசிரியர்கள், 34 மாணவர்கள், 33 மாணவிகள் என மொத்தம், 76 பேர் இன்று காலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சார்ஜா புறப்பட்டனர்.
சார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சி உட்பட கல்வித் தொடர்பான பல்வேறு இடங்களை நேரில் கண்டு களிக்க உள்ளனர். வரும் 14ம் தேதி அதிகாலை திருச்சி விமான நிலையம் மீண்டும் வந்தடைகின்றனர்.
இதையும் படிக்க : விசா பெறுவதில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா?!!