மாலை முரசு செய்தி எதிரொலியால்...குழந்தைக்கு கிடைத்த உறுதி...!

மாலை முரசு செய்தி எதிரொலியால்...குழந்தைக்கு கிடைத்த உறுதி...!

சூளகி அருகே புற்றுநோயால் வலது கண் அகற்றப்பட்ட 4 வயது குழந்தைக்கு, மாலை முரசு செய்தி எதிரொலியால், மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து கண்பார்வை கிடைக்க அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளனர். 

புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள உஸ்தலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் - துளசி தம்பதி. இந்த தம்பதியினரின் 4 வயது குழந்தை ரோஷினிக்கு புற்றுநோய் பாதிப்பால், வலது கண் அகற்றப்பட்டது. இதையடுத்து புற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்க 15 நாட்களுக்கு ஒருமுறை சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், மாற்று கண் அறுவை சிகிச்சை செய்ய அவர்களிடம் சரியான பணவசதி இல்லை. இதைத்தொடர்ந்து, குழந்தையின் இந்த பரிதாப நிலை குறித்து, நமது மாலை முரசு தொலைக்காட்சியில் விரிவான செய்தித் தொகுப்பு வெளியானது.  

இதையும் படிக்க: ஆன்லைன் மசோதாவுக்கு விரைவில் ஒப்புதலா? ஆளுநரை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சொன்னது என்ன?

செய்தி எதிரொலி:

இதையடுத்து செய்தி எதிரொலியாக, கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவ இயக்குனர் ராஜேஷ் தலைமையில் மருத்துவக் குழுவினர் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா ஆகியோர் குழந்தையின் வீட்டிற்கு நேரில் சென்று குழந்தையை பரிசோதித்தனர். இதுவரை பெற்ற சிகிச்சைகளை ஆய்வு செய்த மருத்துவக் குழுவினர், குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விரைவில் கண் பார்வை கிடைக்க  அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் உறுதி அளித்து, பெற்றோருக்கு நம்பிக்கை தெரிவித்தனர்.  குழந்தையின் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நமது மாலை முரசு தொலைக்காட்சிக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.