நீண்ட நேரமாகியும் வருகை புரியாத அதிகாரிகள்...ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய கிராம மக்கள்...!

நீண்ட நேரமாகியும் வருகை புரியாத அதிகாரிகள்...ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய கிராம மக்கள்...!

மே தினத்தையொட்டி, தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களின் போது குடிநீர், சாலை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்தது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த சிவகிரிப்பட்டி ஊராட்சியில், ஊராட்சித் தலைவர் விஜயலட்சுமி தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. பழனி கோட்டாட்சியர் சிவக்குமார், வட்டாட்சியர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், குடிநீர் வினியோகம் உட்பட தங்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காணக் கோரி மக்கள் மனு அளித்தனர். 

கரூர் மாவட்டம் வேப்பம்பாளையம் ஊராட்சியில், ஊராட்சி தலைவர் பெரியசாமி முன்னிலையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர் பிரபு சங்கர், கிராம மக்களுடன் உரையாடினார். அப்போது பேசிய அவர், குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டுவதை விடுத்து, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதையும் படிக்க : 12 மணி நேரம் வேலை: முதலமைச்சருக்கு நன்றி சொன்ன வைகோ... !

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின்போது,  குடிநீர், சாலை, பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முதலூர் ஊராட்சி மன்ற தலைவர் பொன். முருகேசன் தலைமையில் சொக்கலிங்கபுரம் பகுதியில் கிராம சபை கூட்டத்தில் பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, சொக்கலிங்கபுரம் பகுதியில் குடிநீர், சாலை மற்றும் பேருந்து உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி பெண்கள் மனு அளித்தனர். 

இதனிடையே, அரியலூர் மாவட்டம் தா.பழுர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உதயநத்தம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெறாததால் நீண்ட நேரம் காத்திருந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தொழிலாளர் தினத்தையொட்டி, காலை 11 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பிற்பகல் 2 மணி வரை அதிகாரிகள் வருகை தராததால், கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.