
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவருடன் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செஞ்சி மஸ்தான், மூர்த்தி, சேகர்பாபு, பெரியகருப்பன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்.
தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய அவர், இளைஞரணி நிகழ்ச்சி என்றாலே அதில் ஒரு எழுச்சி என்றும் இருக்கும். தமிழ்நாடு முழுவதும் எத்தனையோ நிகழ்ச்சிகள் இன்று நடக்கிறது என்றாலும் இந்த நிகழ்ச்சி நடப்பதை கேட்டு உதயநிதி நெகிழ்ந்தார் என கூறினார்.
மேலும் பேசிய அவர், திராவிட இயக்கத்தின் முதுகெலும்பு இளைஞரணி தான். இளைஞரணி செயலாளராக எளிதில் வரவில்லை உதயநிதி. ” 2019 தேர்தல் வெற்றிக்கு என்னை விட தொண்டர்களும் தலைவரும் தான் காரணம்” என பெருமிதத்துடன் கூறியவர் உதயநிதி. அவர் இன்னும் மேலும் பல உயரங்களை தொட வேண்டும் என கூறினார்.
இந்த பிறந்தநாளில் அவர் சட்ட மன்ற உறுப்பினராக இருக்கிறார். அடுத்த பிறந்தநாளில் அவர் அமைச்சராக இருக்க வேண்டும் என அனைவரின் ஒத்த கருத்தாக இருக்கிறது. அவரை வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன் என கூறி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள், நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இரத்ததான முகாம், அன்னதானம் நலத்திட்ட உதவிகள் என எதுவாக இருந்தாலும் மக்களுக்கு வேண்டியதை செய்ய வேண்டும் என்ற உதயநிதியின் அன்பு கட்டளையை ஏற்று தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது தன் தனிப்பட்ட விருப்பம் அல்ல, ஒட்டு மொத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆசை, பொதுமக்களின் ஆசை என்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக தன் தொகுதி மக்களுக்கு என்ன தேவையோ அதை அனைத்தையும் கிட்டத்தட்ட கொடுத்து முடித்து விட்டார் உதயநிதி ஸ்டாலின். அது சட்டமன்ற உறுப்பினராக தொகுதிக்கு மட்டும் குறுகி விட கூடாது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுமைக்கும் நன்மை பயக்க வேண்டும் என்பது தான் தங்கள் விருப்பம் என தெரிவித்துள்ளோம் என்றும் கூறினார்.