கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்கியது கால்ஸ் குழுமம்!

கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படவேண்டிய 59 லட்சம் நிலுவைத் தொகையை, ஆரூரான் சர்க்கரை ஆலையின் புதிய நிர்வாகமான கால்ஸ் குழுமத்தினர் நேரில் வழங்கினர். 

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே கொல்லுமாங்குடி பகுதியில் பயிர் செய்யப்பட்ட திரு.ஆரூரான் சர்க்கரை ஆலை திருமண்டக்குடி ஆலையின் அறவைக்கு விவசாயிகள் கரும்பு அனுப்பி வந்தனர். ஆலை நலிவுற்றதால் கடந்த 5 ஆண்டுகளாக இயங்கவில்லை, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு தொகையும் வழங்க வில்லை. இந்த நலிவடைந்த ஆலையை கால்ஸ் நிறுவனத்தினர் ஏலத்தில் எடுத்து NCLT நீதிமன்ற உத்தரவு படி, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவை தொகையினை 57 புள்ளி 36 சதவீதம் 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் செலுத்தி விட்டனர்.

இந்த தொகை விவசாயிகள் தங்களுக்கு போத வில்லை என்றும், முழு கரும்பு தொகையும் வழங்க வேண்டி, போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதியன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் கால்ஸ் குழும நிறுவனத்தினர் ஆகியோரின் முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது.

இதையும் படிக்க : ஐந்து மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது!

அப்போது அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க 57புள்ளி 36 சதவீதம் தொகையை உயர்த்தி சிறப்பு ஊக்கத்தொகையுடன் 75 சதவீதமாக வழங்குமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கால்ஸ் குழும நிர்வாகம் அந்த தொகையை வழங்க ஒப்புக்கொண்டது.  

அமைச்சரின் அறிவுறுத்தலின் படி, கடந்த ஒரு வார காலமாக இந்த சிறப்பு ஊக்கத்தொகை திரு ஆரூரான் சர்க்கரை ஆலை பகுதிகளில் வழங்கப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக , வியாழக்கிழமை கொல்லுமாங்குடி அருகில் உள்ள சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில், கால்ஸ் குழும நிறுவனத்தின்  நிர்வாக ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, கந்தசாமி ஆகியோர் புதுச்சேரி முன்னாள் அமைச்சரும்,கரும்பு விவசாயியுமான கமலகண்ணனுக்கு நிலுவைத் தொகை காசோலையை  வழங்கினர். தொடர்ந்து,  விசாயிகளுக்கு 59 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டன. 

இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 18 விவசாயிகளுக்கு சிறப்பு நிலுவை தொகைக்கான காசோலையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். நிலுவைத் தொகையை பெற்றுக் கொண்ட விவசாயிகள் கால்ஸ் குழுமத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டதுடன்,  சர்க்கரை ஆலைக்கு முழு ஒத்துழைப்பைத் தருவதாக உத்தரவாதம் அளித்தனர்.