தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், 5 மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ளது. இதையடுத்து 5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், தேர்தல் கருத்து கணிப்புகளை தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அதில், சத்தீஸ்கரில் பெரும்பான்மையாக பாஜக 36 முதல் 46 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 54 முதல் 64 இடங்களிலும், இதர கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
மிசோரம் மாநிலத்தில், ஆட்சியில் உள்ள மிசோர் தேசிய முன்னணிக்கு 14 முதல் 20 இடங்களில் வெற்றி வாய்ப்புள்ளதாகவும், ஜோரம் மக்கள் இயக்கத்திற்கு 9-லிருந்து 15 இடங்களிலும், காங்கிரஸுக்கு 7 முதல் 13 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பாஜக 118 முதல் 130 இடங்களிலும், காங்கிரஸ் 91 முதல் 107 இடங்களிலும், இதர கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெறலாம் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே இழுபறி நீடிக்கிறது.
ராஜஸ்தானில் 101 முதல் 125 இடங்களில் பாஜகவும், 62 முதல் 75 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 14 முதல் 15 இடங்களில் இதர கட்சிகளும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதன்படி, காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலங்கானாவைப் பொருத்தளவில் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சி 37 முதல் 51 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 58 முதல் 71 இடங்களிலும் பாஜக 2 முதல் 6 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால் காங்கிரஸ் - பி.ஆர்.எஸ் கட்சி இடையே இழுபறி நிலவுகிறது. ஆளும் பி.ஆர்.எஸ் கட்சி ஆட்சியை இழக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.