ஒருபுறம் இலவசம் வேண்டாம்...மற்றொரு புறம் இலவசங்கள் அறிவிப்பு...பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

ஒருபுறம் இலவசம் வேண்டாம்...மற்றொரு புறம் இலவசங்கள் அறிவிப்பு...பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்கு இலவசங்கள் தடையாக இருக்கும் என கூறும் நிலையில், மறுபுறம் கர்நாடக தேர்தலில் பாஜக இலவசங்களை அறிவித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும்  சாதி ஆணவ படுகொலைகள் மற்றும் கோட்டையூர் கிராமத்தில் பட்டியலினத்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், சாதியவன் கொடுமைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

இதையும் படிக்க : செந்தில் பாலாஜி மதுவிலக்குத்துறை அமைச்சரா அல்லது மது விற்பனைத்துறை அமைச்சரா? - அன்புமணி கேள்வி!

இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பாஜக அந்த மாநில மக்களுக்கு இலவசங்களை கொடுத்திருக்கலாமே, ஏன் அப்போதெல்லாம் கொடுக்காமல் தேர்தல் நேரத்தில், இலவசங்களை அறிவிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒருபுறம் பிரதமர் மோடி இலவசங்களே கூடாது; அது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று கூறி வருகிறார். மற்றொரு புறம் அதே பாஜக அரசு, தேர்தலுக்கு இலவசங்களை
அறிவிக்கிறது. அதற்கு காரணம், அவர்களின் அறிவிப்பு எப்படியாவது மக்களை ஏமாற்றி ஓட்டுக்களை வாங்கி விடலாம் என்ற நோக்கத்தில் தான் என்று குற்றம் சாட்டியுள்ளார்.