செந்தில் பாலாஜி மதுவிலக்குத்துறை அமைச்சரா அல்லது மது விற்பனைத்துறை அமைச்சரா? - அன்புமணி கேள்வி!

செந்தில் பாலாஜி மதுவிலக்குத்துறை அமைச்சரா அல்லது மது விற்பனைத்துறை அமைச்சரா? - அன்புமணி கேள்வி!

செந்தில் பாலாஜியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், செந்தில் பாலாஜி மதுவிலக்குத்துறை அமைச்சரா அல்லது மது விற்பனைத்துறை அமைச்சரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


மதுகடைகளை மூட வேண்டும், மது விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வரும் நிலையில், சென்னை கோயம்பேடு அருகே உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் தானியங்கி மதுபான இயந்திரத்தை கடந்த வாரம் டாஸ்மார்க் நிர்வாகம் கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், ஏடிஎம் மிஷினை போல், பணம் போட்டால் மது என்ற தானியங்கி மதுபான இயந்திரத்தை மூட வேண்டும் எனக் கோரி கண்டனம் தெரிவித்தனர்.

அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தானியங்கி மது விற்பனை இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்துவிடும். எனவே, இந்த இயந்திரத்தை மூட வேண்டும்; இல்லையென்றால் பாமக சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ”அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட எந்த எதிர்க்கட்சி எம்.பி.யாவது இந்தியாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துமாறு பேசி இருக்கிறார்களா அல்லது கவன ஈர்ப்பு தீர்மானமாவது கொண்டு வந்திருக்கிறார்களா? அதற்கு தைரியம் இல்லாதவர்கள் இங்கு வந்து அரசியல் செய்வதாக” கூறினார்.

இதையும் படிக்க : "பாஜக அரசு கொள்ளையடிக்கும் போது பிரதமர் என்ன செய்து கொண்டிருந்தார்" பிரியங்கா கேள்வி...!

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், செந்தில் பாலாஜி மதுவிலக்குத்துறை அமைச்சரா அல்லது மது விற்பனைத்துறை அமைச்சரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் வந்து செல்லும் வணிக வளாகங்களில் மதுப்புட்டி வழங்கும் தானியங்கி எந்திரங்களை அறிமுகம் செய்வது மதுவணிகத்தை ஊக்குவிக்கும் செயல் என்ற குற்றச்சாட்டிற்கு, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பதிலளிக்க  இயலாத மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வேண்டுமென்றால் அன்புமணி இராமதாஸ் நாடாளுமன்றத்தில் பேசி நாடு முழுவதும் மதுவிலக்குக் கொள்கையை கொண்டு வரலாமே? என தம்மைத்தாமே அறிவாளி என்று நினைத்துக் கொண்டு எதிர்வினா எழுப்பியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை அண்ணாநகரில் தனியார் மாலில் அமைந்துள்ள தானியங்கி மதுபான இயந்திரத்தை பார்வையிட்ட தமிழக அரசின் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தானியங்கி எந்திரங்களுக்காக தமிழக அரசு ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என்றும், மது நிறுவனங்கள் இலவசமாக வழங்கியதை தான் டாஸ்மாக் நிறுவனம் பயன்படுத்துவதாகவும்  விளக்கமளித்தார். இந்த விளக்கத்திற்காக அவர் வெட்கப்பட வேண்டும். ஆனால், இப்படி ஒரு மதுவிலக்குத்துறை அமைச்சரை பெற்றிருக்கிறோமே? என்று தமிழ்நாட்டு மக்கள் தான் வெட்கப்பட வேண்டியிருப்பதாக விமர்சித்துள்ளார்.

மது நிறுவனங்கள் அவற்றின் மது வணிகத்தை அதிகரிப்பதற்காக எந்திரங்களை வழங்கி, அவற்றை டாஸ்மாக் நிறுவனம் பயன்படுத்துவதை செந்தில் பாலாஜி ஆதரிக்கிறார் என்றால், மது ஆலைகளின் லாபம் அதிகரிப்பதற்காக மது வணிகம் பெருகுவதையும் ஆதரிக்கிறார் என்று தான் பொருள். அப்படியானால் செந்தில் பாலாஜி மதுவிலக்குத்துறை அமைச்சரா... மது விற்பனைத்துறை அமைச்சரா? என்றும் சரமாரியாக கேள்வி கணைகளை தொடுத்துள்ளார். 

அடுத்ததாக, ‘‘நாடாளுமன்றத்தில் பேசி தேசிய அளவில் மதுவிலக்கை கொண்டு வருவது தானே; அதை விடுத்து இங்கு வந்து அன்புமணி அரசியல் செய்கிறார்’’ என்று பொங்கி எழும் அவருக்கு, பிழைப்புவாத அரசியல் தெரிந்த அளவுக்கு  அரசியலமைப்புச் சட்டம் தெரியவில்லை என்பதையே காட்டுவதாகவும், மதுவிலக்கு என்பது  இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஏழாவது அட்டவணையில் இரண்டாவதாக உள்ள மாநிலப் பட்டியலில்  எட்டாவதாக இடம் பெற்றுள்ளது. அதன்படி மது உற்பத்தி, வணிகம், விற்பனைத் தடை உள்ளிட்ட எந்த முடிவையும் மாநில அரசு தான் எடுக்க முடியும். இந்த விஷயத்தில் மத்திய அரசோ, நாடாளுமன்றமோ எந்த முடிவையும் எடுக்க முடியாது என்பது செந்தில் பாலாஜிக்கு தெரியவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மாநில தன்னாட்சி பேசிக் கொண்டு, அனைத்து துறைகளிலும் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டும் என்று கூறிக்கொண்டு இருக்கும் ஒரு இயக்கம், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் இருந்தும் அதை நாங்கள் பயன்படுத்த மாட்டோம்; நீங்கள் நாடாளுமன்றத்தில் வாதிடுங்கள் என்பது எந்த வகையான தன்னாட்சி கொள்கை? திராவிட மாடலில் இப்படித்தான் தத்துவம் வகுக்கப்பட்டிருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து செந்தில் பாலாஜி மதுவிலக்குத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாளில் இருந்தே, செந்தில் பாலாஜி அவருக்கு கொடுக்கப்பட்ட இலக்குகளை நிறைவேற்றுவதில் தான் தீவிரமாக இருக்கிறார். அதற்காக அவர் எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்காகவா, அல்லது பொது சேவைக்காகவா? என்பதை அமைச்சர் செந்தில் பாலாஜி தான் விளக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 1970-களில் தொடங்கி கடந்த 50 ஆண்டுகளில் மூன்று தலைமுறைகள் மதுவுக்கு இரையாகிவிட்டதாகவும், இனிவரும் தலைமுறைகளாவது மதுவின் சீரழிவில் இருந்து மீட்கப்பட வேண்டும் எனவும்,  அதற்கான நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் எனவும், அவற்றில் முதல் நடவடிக்கையாக அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி விட்டு, சமூகப் பொறுப்பு மிக்க ஒருவரை அமைச்சராக்கி அவரிடம் மதுவிலக்கை ஏற்படுத்தும் பொறுப்பை முதலமைச்சர் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, செந்தில் பாலாஜி கூறிய கருத்துக்கு தனது அறிக்கையின் மூலம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.