பா.ஜ.க. நிர்வாகிகளை குறி வைத்து மர்ம நபர்கள் கைவரிசை...!அடுத்தடுத்து நிலவும் பரபரப்பு!!

பா.ஜ.க. நிர்வாகிகளை குறி வைத்து மர்ம நபர்கள் கைவரிசை...!அடுத்தடுத்து நிலவும் பரபரப்பு!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க. நிர்வாகிகளின் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைக்கும் நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே குடைபாறை பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில் பால்ராஜ். பா.ஜ.க. நிர்வாகியான இவர், இரு சக்கர வாகன விற்பனை தொழில் செய்து வருகிறார். இவரது குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் இண்டிகா கார் மற்றும் 5 இரு சக்கர வாகனங்கள் தீக்கிரையாயின. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதனிடையே, குடோன் வாசலில் இருந்த சிசிடிவி கேமராவில் மர்ம நபர்கள் இரண்டு பேர் வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு தப்பி செல்வது பதிவாகியுள்ளது. 

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி பகுதியில் வசித்து வரும் பா.ஜ.க. நிர்வாகி சிவசேகர் என்பவரின் காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு தீ வைக்கப்பட்டது தொடர்பாக சிவசேகர் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 

இதையும் படிக்க:கழுதை தேய்ந்த கட்டெறும்பாக...பாரத் ஜோடோ யாத்ராவை கிண்டலாக விமர்சித்த அண்ணாமலை..!

கோவை:

கோவை குனியமுத்தூர் அடுத்த சுப்புலட்சுமி நகரை சேர்ந்த பரத் என்பவர், தண்ணீர் பாட்டில் விநியோகம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.  இவரது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர்டு காரின் மீது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றனர். தகவல் அறிந்து வந்த காவல் துணை ஆணையர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார், தடயங்களை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதேபோல், கோவைப்புதூர் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகரான ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரின் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். சத்தம் கேட்டு வெளியில் வந்த அவரது குடும்பத்தினர், வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலின் அடிப்படையில் வந்த போலீசார், அங்கு சிதறி கிடந்த பாட்டில் துண்டுகளை சேகரித்து தடயவியல் சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். 

ராமநாதபுரம்:

இதேபோல், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின்  உதவி நிலைய அலுவலரும், பா.ஜ.க. ஆதரவாளமான மருத்துவர் மனோஜ் குமார் என்பவரின் 2 கார்களுக்கு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்களுக்கு தீ வைக்கப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தாம்பரம்:

சென்னை அடுத்த தாம்பரத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிட்லப்பாக்கம் ராஜ ராஜேஸ்வரி தெருவில் வசித்து வரும் சீதாராமன் என்பவர் வீட்டின் முன்பு நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த சீதாராமன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து வந்த சிட்லபாக்கம் காவல்துறையினர் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டனர். 

இதுபோன்று கடந்த 2 தினங்களில் மட்டும் சென்னை, கோவை, திண்டுக்கல், ராமநாதபுரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வரும் நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.