கழுதை தேய்ந்த கட்டெறும்பாக...பாரத் ஜோடோ யாத்ராவை கிண்டலாக விமர்சித்த அண்ணாமலை..!

கழுதை தேய்ந்த கட்டெறும்பாக...பாரத் ஜோடோ யாத்ராவை கிண்டலாக விமர்சித்த அண்ணாமலை..!

”பாரத் ஜோடோ யாத்ரா” முடியும் போது ராகுல் காந்தியின் ஷூ தேய்கிறதோ இல்லையோ ஆனால் காங்கிரஸ் கட்சி தேய்ந்துவிடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

இந்திய ஒற்றுமை பயணம்:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி “பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கியுள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லும் இந்த ஒற்றுமை நடைப்பயணம், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், மத்திய அரசுக்கு எதிராகவும் தொடங்கியதாக கூறப்பட்டது. இந்த நடைப்பயணமானது தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் 15 நாள் நிறைவுபெற்றுள்ளது. இந்த பயணத்தின்போது வழிநெடுகிலும் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை பெருமிதம்:

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், பாஜக சார்பில் நடைப்பெற்ற பிரதமர் மோடி பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த பூமியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை பேச வைத்தது பாஜகவுக்கு பெருமை என அண்ணாமலை பெருமிதம் கொண்டார்.

யாத்திரை முடிவில் காங்கிரஸ் கட்சி தேய்ந்துவிடும்:

தொடர்ந்து பேசிய அவர், இந்திய ஒற்றுமை பயணத்தில் சென்றுக்கொண்டிருக்கும் ராகுல் காந்தி பாதையாத்திரையின் போது, பிரிவினை வாதிகளை சந்தித்து வருகிறார்.  இந்த பயணத்தில் ராகுல் காந்தியின் ஷூ தேய்கிறதோ இல்லையோ யாத்திரை முடியும் போது காங்கிரஸ் கட்சி தேய்ந்துவிடும் என்று ஆவேசமாக பேசினார். 

இதையும் படிக்க: எதிர்த்து பேசினால் கைது செய்வதுதான் திராவிடமாடல் ஆட்சியா...? அண்ணாமலை ஆவேசம்!

கழுதை தேய்ந்த கட்டெறும்பாக தான் ராகுல் காந்தி காஷ்மீர் செல்வார்:

ராகுல் காந்தி நடைப்பயணம் மூலம் கோவாவுக்கு செல்லும் முன்பே, கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர் பாஜகவில் சேர்ந்துவிட்டனர்; இப்படி இருக்க ராகுல் காந்தி காஷ்மீரை அடையும்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் பாஜகவில் இணைந்து விடுவார்கள் என்றும், இறுதியில் கழுதை தேய்ந்த கட்டெறும்பாக தான் ராகுல் காந்தி காஷ்மீர் செல்வார் என்றும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து பேசினார்.

இந்த பின்னணியில், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக ராகுல் காந்தி நடத்தும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லும் இந்த ஒற்றுமை நடைப்பயணம், 2024 ஆம் ஆண்டு தேர்தலில் அவர்களுக்கு கைக்கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...