” தனியார் பள்ளி மாணவர்களுக்கும் அரசே சீருடை, புத்தகம் வழங்க கூறிய உத்தரவில் திருத்தம் ”- உயர்நீதிமன்றம்.

” தனியார் பள்ளி மாணவர்களுக்கும் அரசே சீருடை, புத்தகம் வழங்க கூறிய உத்தரவில் திருத்தம் ”- உயர்நீதிமன்றம்.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவருக்கான சீருடை, பாட புத்தகங்களுக்கான கட்டணங்களையும் அரசு வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை அமல்படுத்த கூடாது எனவும், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, புவனேஸ்வரிபேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் சேர்க்கை பெற்ற சுவேந்தன் என்ற மாணவருக்கு பாட புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படாததால், அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி தண்டபாணி, கல்வி உரிமைச் சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களின் கல்விக்கட்டணம் மட்டுமல்லாமல் சீருடை, பாட புத்தகங்களுக்கான கட்டணங்களை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், கல்வி உரிமைச் சட்டத்தை தமிழக அரசு தீவிரமாக அமல்படுத்தி வருவதாகவும், மாநிலம் முழுவதும் 92 ஆயிரத்து 234  வசிப்பிடங்களில் 97.5 சதவீத இடங்களில் அரசு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடக்கப் பள்ளிகளை துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், தனியார் பள்ளிகளுக்கு 2013-14 முதல் கோடிக்கணக்கான ரூபாயை கட்டணமாக வழங்கி வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய பள்ளிக்கல்வித் துறை, 2020-21ம் ஆண்டு 56,687 மாணவர்களுக்கு 364 கோடி ரூபாய் கட்டணமாக வழங்கியுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களின் சீருடை, பாட புத்தகங்களுக்கான செலவு அரசு பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் வித்தியாசப்படும் என்பதால் அரசுக்கு நிதிச்சுமை அதிகமாகி அரசு கருவூலம் பாதிக்கப்படும் எனவும் மேல் முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, தனி நீதிபதி உத்தரவை அமல்படுத்தும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, மேல் முறையீட்டு மனுவில் விசாரணையை செப்டம்பர் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

இதையும் படிக்க | மொழியின் அடிப்படையில் இளைஞர்களின் தகுதியை காண்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி..! - பிரதமர்.