சிறை கைதிகளுக்கு ஆதார் அட்டை - சிறப்பு முகாம் அமைத்த சிறைத்துறை... 

சிறை கைதிகளுக்கு ஆதார் அட்டை - சிறப்பு முகாம் அமைத்த சிறைத்துறை... 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஆதார் அட்டை பெற்றுத் தரும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் சிறப்பு முகாம் நடத்த திட்டமிட்டு சிறைத்துறை சார்பில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகளுக்கு ஆதார் அட்டை :

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்படும் கைதிகளிடம் ஆதார் அட்டை விண்ணப்பிக்க உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், பெரும்பாலான சிறைக் கைதிகள் ஆதார் அட்டை இல்லாமல் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக சிறையில் இருந்து கைதிகள் விடுதலையாகி வெளியே சென்ற பின்னர் அவர்கள் வேலைக்கு விண்ணப்பிப்பதிலும், தனியாக தொழில் தொடங்க வங்கியில் கடன் பெறுவதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கைதிகளின் இந்த சிரமங்களைப் போக்கும் வகையில் ஆதார் அடையாள அட்டை வழங்கும் UIDAI ஆணையம் தற்போது Prisoners Induction Document (PID) என்ற ஆவணத்தை ஆதார் அட்டை பெறுவதற்கான ஆவணமாக பயன்படுத்தலாம் என ஒப்புதல் வழங்கியது. 

மேலும் படிக்க | போலி அடையாள அட்டையுடன் சிக்கிய நபர்...குண்டு கட்டாக தூக்கிச் சென்ற காவல்துறை..

சிறைத்துறையில் ஆதார் முகாம் :

அதன் தொடர்ச்சியாக சிறைத்துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் e-prison மென்பொருள் வாயிலாக PID ஆவணத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்ற நிலையில், சிறைத்துறை சார்பில் அனைத்து கைதிகளுக்கும் ஆதார் அட்டை பெற்றுத் தருவதற்குண்டான சிறப்பு முகாமை தமிழக சிறைகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நேற்றைய தினம் திருச்சி மத்திய சிறையில் இதற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 300 சிறைவாசிகளுக்கு ஆதார் அட்டைகள் பெற்றுத் தருவதற்குண்டான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.