பாஜக கோரிக்கை...மனுவை திரும்ப பெற்ற அதிமுக வேட்பாளர்...!

பாஜக கோரிக்கை...மனுவை திரும்ப பெற்ற அதிமுக வேட்பாளர்...!

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் அன்பரசன் மனுவை திரும்ப பெற்றுள்ளார். 

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 13 ஆம் தேதியும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இவ்வறிவிப்பை அடுத்து பாஜகவும், காங்கிரஸ்சும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என முழுவீச்சில் இறங்கி பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க : வெறிச்சோடிய திருச்சி மாநாடு... ஓபிஎஸ்-க்கு திருப்புமுனையாக அமையுமா?

இதற்கிடையில் கர்நாடக தேர்தலில் அதிமுக தன்னிச்சையாக போட்டியிடும் என்று தகவல் வெளியானது. அதன்படி, கர்நாடகாவின் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிடுவார் என கடந்த வாரம் கட்சி தலைமை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு பிறகு, தனது கூட்டணி கட்சியான பாஜகவை எதிர்த்து அதிமுக போட்டியிடுவதாக கருத்துக்கள் பேசப்பட்டு வந்தது. 

இந்நிலையில் அதிமுக வேட்பாளர் அன்பரசன் வேட்புமனுதாக்கல் செய்த நிலையில், கட்சி அறிவுறுத்தலின் பேரில் தற்போது வாபஸ் பெற்றுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது கூட்டணியில் இருக்கும் பாஜகவின் கோரிக்கையை ஏற்று புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக போட்டியிடாது என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.