எய்ம்ஸ் எங்கே?...ஒற்றை செங்கலுடன் போராட்டம்...நிதி ஒதுக்குமா மத்திய அரசு...!

எய்ம்ஸ் எங்கே?...ஒற்றை செங்கலுடன் போராட்டம்...நிதி ஒதுக்குமா மத்திய அரசு...!

Published on

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாவதைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஒற்றை செங்கலுடன் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இந்த மருத்துவமனை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்வதில் இருந்து, தற்போது மருத்துவமனை கட்டும் பணி தொடங்குவது வரை பல்வேறு சிக்கல்கள் நிலவி வரும் நிலையில், இன்றளவும் முழுமையான பணிகள் தொடங்கவில்லை. அதற்கு முன்பே, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி, அவர்களுக்கான வகுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்து வருகின்றது.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி வருவதில் தாமதமாகும் நிலையில், மத்திய அரசு தன் பங்கீடான 400கோடி ரூபாயை வரும் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மதுரை, பழங்காநத்தம் பகுதியில் இன்று தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.    

தொடர்ந்து இந்த போராட்டத்தின் போது, திமுக கூட்டணி கட்சியினர் கையில் செங்கல் ஒன்றை வைத்தபடி “எய்ம்ஸ் எங்கே?” என்று முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com