நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி கொள்ள பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் - முதலமைச்சர்

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி கொள்ள பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் - முதலமைச்சர்

முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் உள்ள அனைத்து அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுகவில் உள்ள 23 அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, பொன்முடி, கனிமொழி, ஐ. பெரியசாமி, அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், தமிழகம் முழுவதிலும் இருந்து அணியின் தலைவர், துணைத் தலைவர் செயலாளர் என 200 க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அணிகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுகவில் நிர்வாக ரீதியில் உள்ள 23 அணிகளின் செயல்பாட்டை கண்காணிக்கும் விதமாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து அணிகளை கண்காணிப்பதற்கான பொறுப்பாளர்களாக துணைப் பொதுச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐ பெரியசாமி, கனிமொழி , பொன்முடி, ஆ ராசா உள்ளிட்ட துணைப் பொதுச் செயலாளர்கள் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்படுவதாகவும, இளைஞர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி உள்ளிட்ட ஐந்து அணிகளுக்கு ஐ பெரியசாமி பொறுப்பாளராகவும், மகளிர் அணி, தொண்டர் அணி உள்ளிட்ட ஐந்து அணிகளுக்கு பொறுப்பாளராக கனிமொழியும் நியமனம் செய்யப்படுவதாக கூறினார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போதிருந்தே துவக்குங்கள் எனவும், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி கொள்ள பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள். அதனை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என கூறினார். அணிகளில் வழங்கப்பட்ட பொறுப்பை பெருமையாக கருதிக்கொண்டு இருக்காமல் களத்தில் பணியாற்ற வேண்டும் எனவும் அனைத்து அணிகளும் ஒருங்கிணைந்து செயல்படுங்கள், அணிகளுக்கென்று சரியான நிர்வாகிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை நியமிக்க உத்தரவு என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், அணிகளுக்கு என்று தன்னிச்சையான சுதந்திரம் தேவை. தங்கள் அணிகளின் நிர்வாகிகளை நியமிப்பதில் தங்களுக்கு உரிமை தேவை எனவும், அணிகளின் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்களை நியமிப்பதில் மாவட்ட செயலாளர்கள் சொல்வதை தான் பெரும்பாலான நேரங்களில் கேட்க வேண்டிய சூழல் உள்ளது என்றார். 

இன்று கலந்து கொண்ட மாநில நிர்வாகிகளில் இருந்து 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு பொறுப்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். அவர் தான் அனைத்து வாக்குச்சாவடி பாக முகவர்களை கண்காணிக்க வேண்டிய பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : வருமானவரித்துறை அதிகாரிகள் எனக்கூறி லட்ச கணக்கில் பணம் கொள்ளை...!