வருமானவரித்துறை அதிகாரிகள் எனக்கூறி லட்ச கணக்கில் பணம் கொள்ளை...!

வருமானவரித்துறை அதிகாரிகள் எனக்கூறி லட்ச கணக்கில் பணம் கொள்ளை...!

சென்னை கொடுங்கையூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் என்று கூறி 68 லட்ச ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்(42). இவர் அதே பகுதியில் சொந்தமாக நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இதேபோன்று அதே பகுதியில் நகை கடை வைத்து நடத்தி வருபவர் கிரண். இவர்கள் இருவரும் தனது கடையில் பணிபுரியும் குண்டூர் பகுதியைச் சேர்ந்த அலிகான் (25) மற்றும் சுபானி (25) ஆகிய இரண்டு பேரிடம் 68 லட்சம் ரூபாய் மற்றும் 50 லட்சம்  ரூபாயை தனித்தனியாக கொடுத்து சவுகார்பேட்டைக்கு சென்று நகைகளை வாங்கி வரும்படி கூறியுள்ளனர்.

இதில் விஸ்வநாதனிடமிருந்து அலிக்கான் என்பவர் 68 லட்சம் ரூபாயும், கிரண் என்பவரிடமிருந்து சுபானி 50 லட்சம் ரூபாயும் பெற்றுக் கொண்டு கடந்த 15 ஆம் தேதி ஆந்திராவில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்தனர். மறுநாள் சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை அருகே ஆட்டோவில் வந்த அவர்களை, காரில் வந்த நான்கு நபர்கள் வழிமறித்து தாங்கள் வருமானவரித்துறையை சார்ந்தவர்கள் என்று கூறி ஆட்டோவில் இருந்த இரண்டு நபர்களில் அலிக்கான் என்பவரை மட்டும் காரில் ஏற்றினர். 

இதனைப் பார்த்த சுபானி தான் வைத்திருந்த பணத்துடன் ஆட்டோவில் இருந்து தப்பி ஓடி விட்டார். அலிகானை தனது காரில் ஏற்றிய மர்ம நபர்கள், அவர் வைத்திருந்த 68 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு மாதவரத்தை அடுத்துள்ள மஞ்சம்பாக்கம் பகுதியில்  அவரை இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். பின்னர் அலிக்கான் இதுகுறித்து தனது உரிமையாளருக்கு கொடுத்த தகவலின் பேரில் பணத்தின் உரிமையாளர் விஸ்வநாதன் என்பவர் கொடுங்கையூர் பகுதிக்கு வந்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆட்டோவில் இருந்து தப்பித்த சுபானி ஆந்திராவிற்கு சென்று தனது முதலாளியான கிரன் என்பவரிடம் 50 லட்சம் ரூபாயை கொடுத்துவிட்டு நடந்தவற்றை கூறியுள்ளார். 

இதனையடுத்து ஆந்திராவிற்கு சென்ற சுபானி மற்றும் பணத்தை பறி கொடுத்த அலிக்கான் ஆகிய இருவரையும் கொடுங்கையூர் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்ம நபர்கள் வந்த கார் எண்ணை வைத்து கடந்த 23 ஆம் தேதி  ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கட நரசிம்மராவ் (31) என்ற நபரை கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மாதந்தோறும் நகைக்கடை உரிமையாளர்களான விஸ்வநாதன் மற்றும் கிரண் ஆகிய இருவரும் ஒரு குறிப்பிட்ட பணத்தை கொடுத்து சௌகார்பேட்டைக்கு சென்று நகை வாங்கி வரும் படி கூறுவதை நன்கு அறிந்த சுபானியின் உறவினரான  சையத் அப்துல் பாஜி என்பவர் பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளார். சுபானி மற்றும் அலிகான் எப்போது கிளம்புகிறார்கள் என்ற தகவலை அஞ்சு பாபு, மகேஷ், ஷேக் சுபாணி ஆகியோருக்கு கொடுத்துள்ளார். அதன்படிமாதவரத்தில் தயாராக இருந்து இந்தக் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது.

இதனை அடுத்து கடந்த 24ஆம் தேதி கார் வாடகைக்கு எடுத்துக் கொடுத்த ஹைதராபாதை சேர்ந்த வெங்கட நரசிம்மராவ் என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து கொடுங்கையூர் போலீசார் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிய நபர்களை கொடுங்கையூர் போலீசார் தேடி வந்தனர். 

இந்நிலையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டவர்கள் செல்போன் சிக்னல் சென்னைக்கு அருகாமையில் நேற்று காண்பித்தது. இதனால் உஷாரான போலீசார் தொடர்ந்து செல்போன் சிக்னலை வைத்து மூலக்கடை பகுதியில் சையத் அப்துல் பாஜி என்ற நபரை முதலில் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு இடங்களில் மற்ற கூட்டாளிகளான அஞ்சு பாபு, ஷேக் சுபாணி மகேஷ் ஆகியோரையும் கொடுங்கையூர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் சையத் அப்துல் பாஜியும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட போது தப்பி ஓடி 50 லட்சம் பணத்தை முதலாளியிடம் கொடுத்த  சுபானி என்பவரும் உறவினர்கள் என்பதும் சுபானி கொடுத்த தகவலின் பேரிலே இந்த கடத்தல் நாடகம் அரங்கேறி உள்ளதும் தெரியவந்தது. சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அலிகான் கொண்டு வந்த பணத்தை மட்டும் கொள்ளையடித்து விட்டு சுபானி கொண்டு வந்த பணத்தை உரிய முறையில் கொண்டு சென்று சேர்த்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ஏற்கனவே கொடுங்கையூர் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்த சுபானியையும் கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர். ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : சென்னையில் மூடுபனி...! திருப்பிவிடப்பட்ட விமானங்கள்...!