உடல் உறுப்பு தானம் பெற 6-த்திற்கும் மேற்பட்டோர் காத்திருப்பதாக மா.சுப்பிரமணியன் தகவல்!

இதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளை தானம் பெற 6 ஆயிரத்து 811 பேர் பதிவு செய்து காத்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் மற்றும் உடல் உறுப்பு தானம் தினம் குறித்த நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் மற்றும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் ஒரு கோடியே 44 லட்சத்து 70 ஆயிரம் குடும்பத்தினர் பயன்பெற்றுள்ளதாக கூறினார். 

நிகழ்ச்சியின் இடையே பேசிய மருத்துவர் அசோகன், தனது மகன் ஹிதேந்திரன் மறைந்து 15 ஆண்டுகள் ஆன நிலையில், அவனது உடல் உறுப்புகள் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.

இதையும் படிக்க : ’த்ரீ எக்ஸ் த்ரீ’ கூடைப்பந்து போட்டி; தமிழ்நாடு ஆடவர் அணி முன்னேற்றம்!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் 313 கொடையாளர் மூலம், ஆயிரத்து 242 உறுப்புகள் தானமாக பெறப்பட்டதாக கூறிய அவர், இதன் மூலம் 663 பேர் பயன் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்ற மனிதாபிமானத்துடன் கூடிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.