கே.என்.நேரு - திருச்சி சிவா மோதல்: திமுக நிர்வாகிகள் 4 பேர் இடைநீக்கம்...!

கே.என்.நேரு - திருச்சி சிவா மோதல்: திமுக நிர்வாகிகள் 4 பேர் இடைநீக்கம்...!
Published on
Updated on
1 min read

அமைச்சர் நேரு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ஆதரவாளர்கள் நான்கு பேர் திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி எஸ்பிஐ காலனியில் நமக்கு நாமே திட்டத்தில் கட்டப்பட்ட டென்னிஸ் அரங்கை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார். திறப்பு விழா கல்வெட்டில் திருச்சி சிவா புறக்கணிக்கப்பட்டு அவருக்கு அழைப்பு விடுக்காததால் ஆத்திரமடைந்த திருச்சி சிவா ஆதரவாளர்கள் அமைச்சர் நேருவின் காரை வழிமறித்து கருப்புக் கொடி காட்டினர். இதையடுத்து, திருச்சி சிவாவின் வீட்டில் குவிந்த அமைச்சர்  நேருவின் ஆதரவாளர்கள் கார் கண்ணாடி மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து  உடைத்தனர். மேலும், அங்கிருந்த நாற்காளிகளை  உடைத்தனர். 

இந்நிலையில்,  திருச்சி சிவா ஆதரவாளர்கள் 9 பேரும் நேருவின் ஆதரவாளர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, திருச்சி நீதிமன்றக் காவல் நிலையத்திற்குள் புகுந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள்  திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது, காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலர் சாந்தியின் கை உடைந்தது.

இதையடுத்து, பெண் காவலர் அளித்த புகாரின் பேரில், இரு தரப்பைச் சேர்ந்த 30 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், நேருவின் ஆதரவாளரான 54 ஆவது பகுதி செயலாளர் திருப்பதியை கைது செய்தனர்.

இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் திருச்சி மத்திய மாவட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணை செயலாளர் முத்து செல்வம், மாவட்ட பொருளாளர் துரைராஜ்,  55 ஆவது வட்டச் செயலாளர் ராமதாஸ் ஆகியோரை தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக  திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நால்வரும் திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com