கோலாகலமாக இன்று தொடங்கும் பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி...!

கோலாகலமாக இன்று தொடங்கும் பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி...!

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று கத்தார் நாட்டில் கோலாகலமாக தொடங்க உள்ளது. 

இந்த உலக கோப்பை கால்பந்து போட்டி 1930 ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இடையில் இரண்டாம் உலகப்போர் காரணமாக 1942,1946 ஆகிய ஆண்டுகளில் இந்த போட்டி நடத்தப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 2018 ஆண்டு இந்த உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெற்றது. அதில் பிரான்ஸ் அணி பட்டம் வென்றது. 

இந்நிலையில், தற்போது, 22 - வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று தொடங்கி டிசம்பர் 18 ஆம் தேதி வரை 29 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பிரேசில், ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட 32 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் பல பரீட்சை செய்யும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும்.

அதன்படி, தொடக்க நாளான இன்று, 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள கத்தார்-ஈகுவடார் அணிகள் மோதுகின்றன. அல்கோர் நகரில் உள்ள 60 ஆயிரம் இருக்கைகள் வசதி கொண்ட அல் பேத் ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடக்கிறது. இந்த முறையும் இந்திய அணி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

-- சுஜிதா ஜோதி 

இதையும் படிக்க :சென்னை உயர்நீதிமன்றம் மூடல்....!! என்ன காரணம்...?